உலகம்

பிரித்தானிய பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் உமா குமரன் வெற்றி!

(UTV | கொழும்பு) –    2024ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழரான பெண் வேட்பாளர் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த பெண் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கைத்தீவின் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து போருக்கு பின்னர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களான தம்பதியரின் மகள் உமா குமரன். தொழில் கட்சி சார்பில், ஸ்டார்போட் பவ் (Stratford and Bow) தொகுதியில் போட்டியிட்ட உமா குமரன், அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

இம்முறை முதல் முறையாக 8 தமிழர்கள் பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருந்தனர். தொழில் கட்சியின் சார்பாக கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) மற்றும் உமா குமாரன் (Uma Kumaran) ஆகியோர் போட்டியிட்டிருந்த நிலையிலேயே உமா குமரன், வெற்றிபெற்றுள்ளார்.

உமா குமரன் மொத்தமாக 19,145 வாக்குகளை பெற்றதுடன், இவரை எதிர்த்து போட்டியிட்ட கிரீன் (பசுமை) கட்சியைச் சேர்ந்த ஜோ ஹட்சன் 7,511 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார். அதேபோன்று ஜாகிர் ஹுசேன் என்ற தமிழ் பேசும் இஸ்லாமியர் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டிருந்தார். மேலும், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன் ஆகியோரும் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டிருந்தனர். வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானியாவில் தமிழர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது.

பிரித்தானிய தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றால் அது இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளுக்கு வலுவாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் உமா குமரனின் வெற்றியானது ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் தாக்கம் செலுத்தும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்காவில் ஊரடங்கு சட்டத்தை படிப்படியாக நீக்க தீர்மானம்

Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 12,000 தீயணைப்பு வீரர்கள் பணியில்