குருந்தூர்மலை, வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இந்து அமைப்புக்களின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இந்து மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நல்லை ஆதீன குருமுதல்வர் தலைமையில் நல்லை ஆதீனத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற இச்சந்திப்பில் இந்து மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என கலாநிதி ஆருதிருமுருகன் தெரிவித்தார்.
இச்சந்திப்பு தொடர்பில் ஆறுதிருமுருகன் மேலும் தெரிவித்ததாவது..
குருந்தூர்மலை, வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது.
மேலும் திருக்கோணமலை மற்றும் திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே உள்ள பாதையின் இருமருங்குகளிலும் அமைக்கப்பட்டு இருக்கின்ற பெட்டிக் கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
காங்கேசன் துறை தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள இடமானது சைவமக்களின் சத்திரம் இருந்த நிலம் என்பதுடன் அந்த நிலம் இதுவரை விடுவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியதுடன் அதனை உடனடியாக விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடப்பட்டது.
இவ்வாறு நாம் விடுத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர், குருந்தூர்மலை, வெடுக்குநாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம். எனினும், அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
மேலும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
இந்தச் சந்திப்பில், நல்லை ஆதீன சுவாமிகள், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.