இந்நாட்டில் காணப்பட்ட பிரிவினைவாத யுத்தத்தில் போர் முறையில் போராடிய வீரர்கள் யுத்தக் குற்றம் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராகவும், அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றச் சாட்சியங்களைச் சேகரிக்கும் வெளியகப் பொறிமுறையொன்று இரண்டு வருடங்களாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 46/1 பிரேரணைக்கு அமைய அமைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் (கலாநிதி) சரத் வீரசேகர தெரிவித்தார்.
இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகக் கணிசமானளவு சாட்சிகள் அவர்களிடம் இருப்பதாக குறித்த பொறிமுறையின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (05) அவர் தலைமையில் கூடியபோதே பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) சரத் வீரசேகர இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறு யுத்தக் குற்றம் இழைத்ததாக சாட்சி கிடைத்திருக்கும் இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட அதிகாரத்தின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குத் தொடர்வதற்கு ஏற்கனவே சில நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வெளியகப் பொறிமுறை வெளிவிவகார அமைச்சினால் நிராகரிக்கப்பட்டுள்ள போதும், இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால் இலங்கையின் இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம் என்பதே இங்குள்ள ஆபத்தான நிலைமையாகும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கு எதிரான யுத்தம் அன்றி தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தமாக அடையாளப்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த வெளியகப் பொறிமுறைக்கு வாய்ப்புக் காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த நடைமுறையானது இராணுவ வீரர்களின் சுயமரியாதைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும், இவர்கள் மீது ஏனைய நாடுகள் போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இது தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படும் நாடுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமது அமைச்சு நடவடிக்கை எத்திருப்பதாவும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
குழுவின் அமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி தர்ஷன வீரசேகர இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், வலுவான தேசிய பொறிமுறையொன்று காணப்பட்டாலே வெளியகப் பொறிமுறையினால் சேகரிக்கப்படும் சாட்சிகளைத் தோற்கடிக்க முடியும் என்றும், இது தொடர்பில் எல்.எல்.ஆர்.சி அறிக்கை மற்றும் பரணகம அறிக்கையில் உள்ள விடயங்களை உள்ளடக்கியதாக தேசிய தகவல் கோப்புத் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.
உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இந்நாட்டுக்கு எதிராக செயற்படும் வெளியகப் பொறிமுறையை மேலும் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமையும் என்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் அன்றையதினம் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், உயர்நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திருத்தங்களுக்கும் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் இந்நாட்டுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதம் என்ற பதம் சரியாக அர்த்தப்படுத்தப்படவில்லையென்றும் பல பயிற்சிகளின் விளைவாக பயங்கரவாதியொன்று உருவாவதால், இந்தப் பயிற்சிகள் மற்றும் சிந்தனை மாற்றங்கள் ஆரம்பிக்கும்போது போது பயங்கரவாதியைப் பிடிப்பதற்கு எந்த முறையும் இல்லை என்பது தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.