உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியாவில் கைதான 4 இலங்கையர்களின் விசாரணைகள் நிறைவு : பயங்கரவாதம் குறித்து ஆதாரமில்லை

கொழும்பு ‍ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து குஜராத் மாநிலம், அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை மையப்ப‌டுத்தி, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பெரும்பாலும் நிறைவுக்கு வந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்ப‌டும் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் கட்டுப்பாட்டில், சி.ரி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனை மற்றும் கட்டுப்பாட்டில் சிற‌ப்புக் குழு இவ்விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அதன்படி இவ்விவகாரத்தில் இலங்கையில் 8 பேர் கைது செய்யப்பட்டு நிர்வாக தடுப்புக் காவலின் கீழ் வைக்கப்பட்டு வரும் நிலையில், அவ்விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ள‌தாகவும் அதில் பயங்கரவாதம் அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து எந்த ஆதாரங்களும் வெளிப்ப‌டுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையக உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

அதே நேரம் இந்தியாவில் இருந்து கிடைக்கப் பெரும் தகவல்களின் படி, இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராகவும் பயங்கரவாதம் குறித்து குற்ற‌ம் சுமத்த வலுவான ஆதாரங்கள் இல்லை எனவும், பெரும்பாலும் அவர்களுக்கு எதிராக‌ வேறு குற்ற‌ச்சாட்டுக்களின் கீழ் குஜராத் பொலிஸார் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாகவும் அறிய முடிகின்றது.

அதன்படி அவர்களுக்கு எதிராக கடத்தல் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு முன் வைகப்படலாம் என தெரிகிறது.

இதுவரை இலங்கையில் 8 பேர் கைது :

இந்த விவகாரத்தில் 8 பேர் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நிர்வாக தடுப்புக் காவலின் கீழ் விசாரிக்கப்பட்டுவருகின்றனர். அதில் பிரதான சந்தேக நபராக தெமட்டகொடை பகுதியை சேர்ந்த ஒஸ்மன் ஜராட் புஷ்பகுமார் என்பவர் அடையாளப்ப‌டுத்தப்பட்டுள்ளார். முதலில் மாளிகாவத்தை ‍ ஜும் ஆ மஸ்ஜித் லேனை சேர்ந்த்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிலாபம் ‍ பங்கெதெனிய பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும் இலங்கையில் கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சந்தேக நபராக கருதப்ப‌டும் ஒஸ்மான் ஜெரோட்டின் உடன் பிறந்த சகோதரர்களாவர். பின்னர் மாவனெல்லையை சேர்ந்த்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் கொழும்பில் தனது உருவத்தை மாற்றி மறைந்திருந்த ஒஸ்மன் ஜெரோட்டும் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வத்தளை பகுதியில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி காணொளிகளை வெளியிடும் இஸ்மத் என பலராலும் அறியப்ப‌டும் நபரும் உள்ளடங்குகின்றார்.

குறிப்பாக இஸ்மத்துக்கு இந்திய தொடர்புகள் சில இருப்பதாக கூறும் புலனாய்வாளர்கள் அது தொடர்பிலும் அவரது வங்கிக் கணக்குக்கு இந்தியாவிலிருந்து கிடைக்கப் பெற்றதாக சந்தேகிக்கப்ப‌டும் ஒரு தொகை பணம் தொடர்பிலும் விரிவாக விசாரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லது பயங்கரவாதம் குறித்து குற்றம் சுமத்த எந்த ஆதாரங்களும் வெளிப்ப‌டுத்தப்படவில்லை எனக் கூறும் விசாரணையாளர்கள், மிக விரைவில் கைது செய்யப்பட்ட 8 பேர் தொடர்பிலும் தீர்மானம் ஒன்று எடுக்கப்ப‌டும் எனவும், பொலிஸ் சட்ட பிரிவு மற்றும் சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் அவசியம் ஏற்படின் நாடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்தியாவில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையினுடைய பாதுகாப்பு செயலாளர் ஜெனரால் கமல் குண‌ரட்ன, “நாங்கள் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகி இருப்பதை கண்டறிந்துள்ளோம். அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர்” என பதிலளித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

(எப்.அய்னா)

Related posts

பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச இசை விருது விழா

திருக்கோவில் ஆதார  வைத்தியசாலை சர்ச்சை: ஏனைய வைத்தியசாலைகள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பில்