– நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையும் உலகின் இலக்கை, தேசிய கொள்கையில் உள்வாங்கிய முதலாவது ஆசிய நாடு இலங்கையாகும்
– காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், அபிவிருத்தி கண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
– யுக்ரேன் யுத்தத்திற்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்த வருடம் ஒதுக்கிய தொகையை இரண்டு வருடங்களுக்கு காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்குப் பயன்படுத்தலாம்.
-உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி
பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 களில் பசுமை இலக்குகளையும் அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும் என உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்விற்கான உலகின் இலக்கை தேசிய கொள்கையில் உள்வாங்கிய முதலாவது ஆசிய நாடு இலங்கையாகும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் தற்போதைய சுற்றாடல் செயற்பாடுகளை சம்பிரதாய வேலைத்திட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடியாதெனவும், அதனை முன்னோக்கிக் கொண்டுச் சென்று நாட்டின் பொருளாதார மற்றும் வௌிவிவகார கொள்கைகளிலும் அதனை உள்வாங்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.
அதேபோல் காலநிலை மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான மத்திய நிலையச் சட்டத்தின் ஊடாக சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு அமைவான சட்டரீதியான கட்டமைப்பு நாட்டுக்கு உருவாக்கப்படும் என்றும், அவ்வாறானதொரு சட்டக் கட்டமைப்பை எந்தவொரு நாட்டிலும் காண முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேபோல் காலநிலை மாற்றம் தொடர்பான (Cop) மாநாட்டிலும் ஏனைய சர்வதேச அரங்கங்களிலும், இலங்கை முன் நின்று செயற்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான அடிப்படை முன்னெடுப்பாக காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு முன்னதாக சட்டபூர்வமாக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
காலநிலை அர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான மேற்கத்திய நாடுகளும் அபிவிருத்தி அடைந்த நாடுகளும் நிதி வழங்குவதாக உறுதியளித்திருந்தாலும் அது குறித்து நம்பிக்கை கொள்ள முடியாதென தெரிவித்த ஜனாதிபதி, அமெரிக்காவும் ஐரோப்பாவும் இவ்வருடத்தில் யுக்ரேன் யுத்தத்துக்கு ஒதுக்கியிருக்கும் தொகையை கொண்டு இரு வருடங்கள் காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.
காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, வெப்ப வலய நாடுகள் தமக்கு தேவையான நிதியை தேடிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
“பயனுள்ள பூமிப் பயன்பாட்டின் ஊடாக ஆரோக்கியமான இல்லம் ” எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தின கொண்டாட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், “தேசிய பசுமை கொள்முதல் கொள்கை” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுற்றாடல் பாதுகாப்புப் பிரதேசமாக இரத்தினபுரி மாவட்டத்தின் வர்ண கலவத்தை பிரதேசத்தை பிரகடனப்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலிலும் இதன்போது ஜனாதிபதி கையொப்பமிட்டார்.
08 பாடசாலை சுற்றாடல் முன்னோடிகளுக்கும் ஜனாதிபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
இங்கு ‘சொபா’ சஞ்சிகையின் முதலாவது இதழ் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவிடம் கையளிக்கப்பட்டதுடன், பாடசாலைகளுக்கு கனிமப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது, சுற்றுச்சூழலுக்கு உகந்த சுரங்க அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறந்த பசுமையான 10 புகையிரத நிலையங்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 ஆம் திகதி முதல் தேசிய சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதுடன் இந்நாட்டில் காடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடளாவிய ரீதியில் பல விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
இந்த வருட, உலக சுற்றாடல் தினம் மிகவும் முக்கியமான நேரத்தில் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து நாம் கவனம் செலுத்தும் போது, பெரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடைவதற்கான நம்பிக்கையை அது நமக்குத் தருகிறது என்றே கூற வேண்டும்.
உலக வெப்பநிலை நாம் எதிர்பார்த்ததை விட ஏற்கனவே உயர்ந்துள்ளது. மேலும், சில அபிவிருத்தியடைந்த நாடுகள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த இலக்கை அடைய இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளன. மேலும் பெற்றோலிய உற்பத்தி செய்யும் நாடுகளும் உள்ளன.
இவற்றுக்கு மத்தியில் இலங்கை போன்ற சிறிய நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சிக்கித் தவிக்கின்றன. அதற்கு நாம் இப்போது புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, சுற்றுச்சூழல் அமைச்சு நிறுவப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுடன் நின்றுவிட முடியாது. இந்த இலக்குகளை அடைய, பல புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கான பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். அதன் முதல் பணி புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்குவதாகும். நாங்கள் ஏற்கனவே முதல் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.
பொருளாதார பரிமாற்ற சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பொருளாதார மாற்றத்திற்கான தேசியக் கொள்கை (அ) II இல் 2050க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கொள்கையில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை உள்ளடக்கிய ஆசியாவின் முதல் நாடாக நாம் மாறியுள்ளோம்.
நாட்டின் பொருளாதார இலக்குகளை அடையும் போது இந்த இலக்கை அடைய வேண்டும். 2050 வரை காத்திருக்காமல் 2040க்குள் இந்த இலக்கை அடைவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அதற்கேற்ப நாம் செயற்பட்டு வருகின்றோம்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது தேசிய கொள்கையாக மாறும். அன்றிலிருந்து ஒவ்வொரு நிறுவனமும் அதற்கேற்ப செயல்பட வேண்டும், அரசு சாரா பிரிவுகளும் அதன்படி செயல்பட வேண்டும்.
அத்துடன், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். சுற்றுச்சூழல் சட்டம் 80களில் தயாரிக்கப்பட்டது. இப்போது நிலைமை அதனை விட மாறிவிட்டது. எதிர்காலத்தில் அந்தத் திருத்தங்களைச் முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.
குறிப்பாக, காலநிலை மாற்றச் சட்டம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையத்தை நிறுவும் சட்டத்தையும் முன்வைக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த இரண்டு வரைவுகளும் அமுல்படுத்தப்படும் போது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அடிப்படை சட்டக் கட்டமைப்பை இலங்கை கொண்டிருக்கும்.
பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பாக நிதி அமைச்சில் தனிப் பிரிவை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். பசுமைப் பொருளாதாரத்திற்கான திட்டங்களுக்கான நிதி பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் அந்த பிரிவு மூலம் நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த முழுமையான பொறிமுறையை நாம் எதிர்பார்த்துள்ளோம். மேலும், இந்த சுற்றாடல் கொள்கையின்படி தற்போது தொடங்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். இதன் மூலம் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துடன் சுற்றுச்சூழல் கொள்கைகளும் கிராமத்திற்கு செல்கிறது. எனவே இந்த வேலைத்திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்துவோம்.
காலநிலை மாற்றத்தினால் முழு உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான வேளையில் இலங்கை போன்ற ஒரு நாடு அமைதியாக இருக்க முடியாது. எனவே, காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடுகள் (COP) மற்றும் பிற சர்வதேச அரங்குகளில் சுற்றாடலுக்காக முன்வந்து செயற்படுமாறு வெளியுறவு அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கும் நான் தெரிவித்துள்ளேன்.
இங்கு ஒரு முக்கிய விடயமாக காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக் கழகத்தை நிறுவ நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அது குறித்து பல நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன், இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக கொத்மலை பிரதேசத்தில் 600 ஏக்கர் காணியைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.
எதிர்வரும் மாதத்தில் அது குறித்த சட்ட மூல வரைவுத் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அந்தப் பணிகள் முடிந்ததும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் அதனை சட்டப்பூர்வமாக்க எதிர்பார்க்கின்றோம்.
காலநிலை மாற்றத்திற்கு முகங்கொடுப்பது தொடர்பான சர்வதேச அளவிலான ஆராய்ச்சிக்காக இந்தப் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம். மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான நிதியைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இதற்கு நிதி இல்லாததால் மூன்றாம் உலக நாடுகள் அவர்களுக்கு நிதியைப் பெற்றுத் தறுமாறு கேட்கின்றனர். எல்லா நாடுகளும் அந்த கோரிக்கை முன்வைப்பதும் பொருத்தமற்றது. இன்று பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இலங்கை கூட அவ்வாறு நிதி கேட்பதில்லை.
ஆனால் ஆபிரிக்காவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளுக்கு தற்போது திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள கடன்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்காக பல நாடுகளுடன் நாம் இணைந்து இருக்கிறோம். மேலும், மேற்கத்திய நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளிடம் இருந்து இந்த விடயத்திற்காக எங்களுக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட நிதி கிடைக்கவில்லை.
ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்த ஆண்டு யுக்ரேன் யுத்தத்துக்கு பயன்படுத்திய பணத்தைக் காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்க வழங்கியிருந்தால், அந்தப் பணம் இரண்டு ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ரஷ்யா செலவழித்த பணம் இன்னும் கணக்கிடப்படவில்லை. மேலும், காஸா போருக்குப் பயன்படுத்தப்பட்ட பணமும், அதற்காக அனுப்பப்பட்ட ஆயுதங்களின் செலவையும் இந்த நடவடிக்கைகளுக்கு வழங்கியிருந்தால், உலகையே மாற்ற முடியும்.
ஆனால் இந்தப் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, வெப்பமண்டலப் பிரதேசம் என்ற வகையில் எமக்குத் தேவையான பணத்தை நாமே தேடிக்கொள்ள வேண்டும் என இலங்கை முன்மொழிந்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட ஆபிரிக்க நாடுகளுக்கு நிவாரணம் வழங்குமாறு உலகின் வளர்ந்த நாடுகளை வற்புறுத்தும் அதே வேளை, எமக்குத் தேவையான பணத்தை நாமே தேடிக்கொள்வோம். குறிப்பாக சுற்றுச்சூழல் துறையில் கார்பன் கிரெடிட்டைப் பெற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.எனவே நமது நாடுகளில் கார்பன் கிரெடிட் பெறக்கூடிய திட்டங்களை தொடங்க வேண்டும். இதற்காக வெப்ப மண்டலப் பகுதியை ஒதுக்கியுள்ளோம். அந்தந்த நாடுகள் அதற்காக செயற்பட்டால், எமக்குத் தேவையான தொகையில் ஒரு பகுதியைப் பெறும் திறன் நமக்கு உள்ளது. உலகின் காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியை அதற்கேற்ப கட்டுப்படுத்த முடியும்.
பிரேசிலின் அமேசான் நதிப் பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாரிய காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், இதன் போது இந்து சமுத்திரத்தின் வகிபாகம் குறித்தும் நாம் கலந்துரையாடி வருகின்றோம். அதன்படி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலைக் கையாள்வதில் இலங்கையின் வகிபாகம் பாரம்பரியத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. நாம் இன்னும் முன்னோக்கிச் சென்று பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கையிலும் இதனைச் சேர்க்க வேண்டும்”எனவும் ஜனாதிபதி தெரிவித்தார் .
மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,
இயற்கைக்கு கட்டுப்படாத எதுவும் இல்லை. எனவே, நாம் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். கடந்த சில நாட்களாக நம் நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு வளர்ந்த நாடான டுபாய் நாட்டிலும் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கையின் பாதிப்பில் இருந்து விடுபட முடியாது. எனவே, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வாழ வேண்டும். அதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பிள்ளைகளை பாடசாலைகள் மூலம் உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
இவ்வருட உலக சுற்றாடல் தினத்தில் இலங்கையில் வனப் பகுதியை 32 வீதம் வரை அதிகரிப்பதற்கான அடிப்படை வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் சட்டத்தினால் மாத்திரம் செய்ய முடியாது. அதற்கு மனப்பாங்கு ரீதியில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
பசுமை நகரத் திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும். மேலும், இந்த ஆண்டு உலக சுற்றாடல் தினத்தையொட்டி, அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து 10 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி, உள்ளூராட்சி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, காலநிலை மாற்ற அலுவலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு