உலகம்

ஈரான் ஜனாதிபதியின் கொலை பின்னணியில் நாசவேலையா? ஈரானின் அறிவிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, கடந்த மாதம் 19-ஆம் திகதி அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார்.

பின்னர் அவர் அங்கிருந்து இராணுவ ஹெலிகொப்டரில் ஈரானுக்கு புறப்பட்ட நிலையில், ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியது.

இதில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்ததால் இது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்கிற கேள்வி எழுந்தது.

இந்த சூழலில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஈரான் ஆயுத படைகளின் தலைமை, ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது உண்மை தான் என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கடந்த வாரம் தெரிவித்தது.

இந்த நிலையில் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஹெலிகொப்டரில் குண்டு வெடித்து இருக்கலாம் என்று எழுந்த யூகங்களுக்கு ஈரான் அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் ஆயுத படைகளின் தலைமை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ஹெலிகொப்டரின் சிதைவுகள் மற்றும் மீதமுள்ள பாகங்கள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் சிதைவுகள் சிதறிக் கிடந்த விதம் ஆகியவற்றின் சோதனை முடிவுகளை பார்க்கும்போது ஹெலிகொப்டரில் நாசவேலை குண்டு வெடிப்பு எதுவும் நிகழவில்லை என்பது உறுதியாகி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வர்த்தக நாமத்தை ‘Meta’ என மாற்றியமைத்தது ‘Facebook’ நிறுவனம்

வனூட்டில் உள்ள எரிமலையிலிருந்து,வெடித்து சிதறும் தீப்பிழம்புகள்

‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று வெடிப்பு