காசா பிராந்தியத்தில் மோதல் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதுபோல் அயல்ர்லாந்தும் பலஸ்தீன் தனி நாடு கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இது இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கலாக மாறியுள்ளது. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல காலமாகப் போராடி வருகிறார்கள்.
பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்தது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசாவில் போர் ஏற்படத் தொடங்கிய பிறகு நிலைமை மாற தொடங்கியுள்ளது.
இப்போது பல்வேறு நாடுகளும் வரிசையாக பாலஸ்தீனத்தை அங்கீகரித்து வருகிறது. இது குறித்து ஸ்பெயின் பிரதமர் கூறுகையில்,”இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த முடிவின் இலக்காகும்.
இந்த முடிவால் இஸ்ரேல் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் இஸ்ரேல் நாட்டின் ஒரு பகுதி என்பதே இஸ்ரேலின் நிலைப்பாடாக இருக்கிறது.
இதனால் உலக நாடுகள் வரிசையாகப் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் நார்வே மற்றும் அயர்லாந்து நாடுகளின் தூதுவர்களைத் திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தற்போது ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே நாடுகளின் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இதன் மூலம் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளன.
ஐநா சபையில் 193 உறுப்பு நாடுகள் இருக்கும் நிலையில், அதில் இப்போது 145 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது. இதில் பல நாடுகள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் ஆகும். அதேநேரம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா நாடுகள் எதுவும் இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.