உள்நாடு

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கு சுமந்திரன் அழைப்பு!

பொதுவேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை எதிர்வரும் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (27) நடாத்திய ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்றை நான் மேற்கொண்டிருந்தேன். தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது சம்பந்தமாக முனைப்பாக செயற்பட்டு கொண்டிருக்கிற சிவில் சமூகத்தினர், சில பத்தி எழுத்தாளர்கள் என்னை சந்திக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார்கள். அவர்களோடு நிறைவான கருத்துமிக்க கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இந்த யோசனைக்கு மாறாக நான் தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தமாக அதனுடைய காரணங்களை எடுத்துச் சொல்லியிருந்தேன்.

இந்த சூழ்நிலையிலே இப்படியானதொரு முன்னெடுப்பு செய்வதற்கான தங்களுடைய காரணங்களையும் அவர்கள் எங்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தின் இறுதியில் இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பொதுவெளியிலே பகிரங்கமாக ஆரோக்கியமான முறையிலே கருத்து பரிமாற்றம் செய்வது நல்லது என்கின்ற என்னுடைய யோசனையை அவர்களிடத்தே நான் சொன்னபோது அவர்களும் அதனை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.

சென்றவாரம் அல்லது நேற்றைய தினம் அப்படியொரு கூட்டத்தை ஒழுங்கு செய்ய நான் நினைத்திருந்தாலும் கூட சில பல காரணங்களினாலே அது பிற்போடப்பட்டிருக்கிறது.இந்நிலையில், எதிர்வரும் ஒன்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரியளவிலான கூட்டமொன்று இரு தரப்பு நியாயங்களையும் ஆரோக்கியமான முறையிலே கருத்துக்களை பரிமாறுகிற வகையில் ஒழுங்கு செய்திருக்கிறேன்.

இரு தரப்பில் இருந்தும் சிலரை அந்தக் கட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறேன். அப்படியான உரையாடல் நடைபெறுவது நல்லது.ஏனென்றால் பொது மக்களுக்கும் இதனுடைய சாதக பாதகங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இது குறித்து மக்களுடைய மனதிலே எப்படியான சிந்தனைகள் இருக்கிறதென்பதையும் நாங்களும் ஒரு அளவுகோளிட்டு அறியக் கூடியதாக இருக்கும்.

ஆகவே ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசாமல் இதற்குப் பின்னணியில் இது இருக்கிறது அதற்குப் பின்னணியில் அது இருக்கிறது என்ற இந்தப் பின்னணிக் கதைகள் எல்லாம் விடுத்து சரியான விதத்தில் ஒரு கருத்துப் பரிமாற்றம் செய்வது நல்லது. அதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குகிறோம். எனவே தயவுகூர்ந்து அனைவரும் அந்த ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்ற சூழலை பேணுமாறு மிகவும் அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படியான விடயங்களிலே நாங்கள் எடுக்கிற தீர்மானங்கள் மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதிலே மக்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆகவே இந்த விடயத்தை நாங்கள் ஒரு முன்னுதாரணமாக வைத்து ஜனநாயக வழியிலே எப்படியாக கருத்து பரிமாற்றங்களை ஒருவரை ஒருவர் வெளிப்படைத் தன்மையோடு பேச முடியும் என்பதையும் இதன் மூலம் நாங்கள் வெளிப்படுத்த முடியும்.

ஆகையினாலே அடுத்தமாதம் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

Related posts

கம்மன்பிலவிற்கு எதிரான விவாதத்திற்கு திகதி குறிக்கப்பட்டது

புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதே எமது இலக்கு – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

editor

கட்டான கொள்ளைச் சம்பவம் : 05 பேர் கைது