நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவி வரும் நிலையில், நுவரெலியா பகுதியில் கடும் மழையுடனான வானிலை காணப்படுகின்றது.
இந்தநிலையில், இன்று(25) காலை முதல் குறித்த பகுதியில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது.
மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது.
குறிப்பாக வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் வெளி மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வாகனங்களில் வருகை தந்துள்ளனர்.
எனவே குறித்த சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரித்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.