உள்நாடுசூடான செய்திகள் 1

“ஜனாதிபதித் தேர்தலே முதலில்” அமைச்சரைவில் தெளிவாக அறிவித்த ரணில்

அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும். வரவு – செலவு திட்டத்திலும் அதற்கான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் விவகாரத்தில் எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெளிவாக அறிவித்திருக்கின்றார்.

உலக நீர் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் இந்தோனேஷியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை (21) நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில் நேற்று புதன்கிழமை (22) முற்பகல் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன் போது வழமையான அமைச்சரவை யோசனைகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்த பின்னர் தேர்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் ரணில் தரப்பினர் மற்றும் பொதுஜன பெரமுன தரப்பினர் என இரு தரப்பு அங்கத்துவம் வகிக்கின்றது. இவற்றில் ரணில் தரப்பு எந்த தேர்தல் முதலில் நடத்தப்படும் என அறிவிக்குமாறும், அதனை அடிப்படையாகக் கொண்டே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நிதியில் வேறு எந்த தேர்தலையும் நடத்த முடியாது. அரசியலமைப்பின் பிரகாரமும் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். அந்த பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். எனவே ஜூன் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என பரவும் கற்பனை செய்திகளால் குழப்பமடைய வேண்டாம் என ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமைய தேசிய கடன் மறுசீரமைப்பைப் போன்று சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. இதில் காணப்படும் இழுபறியால் நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடன் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இதனை நிறைவு செய்வதற்கு நிலையான ஆட்சி நாட்டில் காணப்பட வேண்டும் என்பதை நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் பரிஸ் கிளப் நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, சீனா ஓரளவு சாதகமான சமிஞ்ஞைகளை காண்பித்துள்ளது. இதே வேளை அரசியலமைப்பிற்கமைய தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதையும் நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. அதற்கமைய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதைப் போன்று செப்டெம்பர் 16 – ஒக்டோபர் 17க்குள் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது.

 

Related posts

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு

ஞாயிறு, திங்களன்று நாடளாவிய ரீதியாக ஊரடங்கு