அரசியல்உள்நாடு

மொட்டை விட்டு விலகும், கல்முனை முக்கியஸ்தர் ரிஸ்லி முஸ்தபா!

(எஸ்.அஷ்ரப்கான்)

மக்களின் தேவைகள், பிரதேச அபிவிருத்தி போன்ற மக்கள் நலன் சார்ந்து செயற்படுகின்ற ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து பயணிக்க தயாராக உள்ளேன் என சமூக சேவகர், முன்னாள்  மொட்டுக் கட்சி முக்கியஸ்தரும் முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் மையோன் முஸ்தபாவின் புதல்வருமான  றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

சமகால அரசியல் களம் தொடர்பில் சிலோன் ஜர்னலிஸ்ட் ஃபோரம் உடனான ஊடகவியலாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடும்போது,

மொட்டு கட்சியிலிருந்து  கடந்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக போட்டியிட்ட நான்  கணிசமான அளவு வாக்குகளை பெற்றேன்.  ஆனால் தற்பொழுது நடுநிலையாகவே பயணித்து வருகிறேன். ஏனென்றால் எமது மக்களின் அவா நிறைவேற்றப்பட வேண்டும். மக்களின் தேவைகள் பிரதேச அபிவிருத்தி, மக்களின் ஒற்றுமை போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் எந்தக் கட்சி மக்கள் நலன் சார்ந்து செயற்படுகிறதோ அந்த கட்சியில் இணைந்து பயணிக்க தயாராக உள்ளேன்.  பல கட்சிகளுடன்  பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. தேசிய ரீதியான கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது ஆனால் இதுவரையில் எந்த கட்சியிலும் நான் இணையவில்லை மிக விரைவில் மேற்சொன்ன விடயங்களுள்ள பொருத்தமான ஒரு கட்சியுடன் இணைந்து நான் பயணிக்க தயாராக இருக்கின்றேன்.

எனக்கு சென்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் கிடைத்தது. தோல்வி கண்டாலும்  நான் உண்மையில் கவலைப்படவில்லை. ஆனால் வாக்குகள் அளித்த  மக்களின்  அமானிதத்தை  பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்    நான் “றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட் ” அமைப்பொன்றை நிறுவி இருக்கின்றேன் அதனூடாக சேவை செய்து வருகின்றேன். அது போன்று மேலும் பல சேவைகளை செய்வதற்காக அரசியல் கட்சிகள் கட்சி ஒன்றில் இணைந்து எமது பயணத்தை தொடரலாம் என நினைக்கின்றேன்.

அபிவிருத்திகள் என்று வருகின்றபோது நாம் மொட்டு கட்சியில் இருந்தபோது அதனூடாக மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தடைகளை தாண்டி பல்வேறு வேலைகளை செய்தோம்.  வீதி அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி, என்றும் இன்னும் பல பல்வேறு வேலை திட்டங்களை நாம் கொண்டு வந்து பல்வேறு தடைகளை தாண்டி சிலவற்றை முடித்தும். வைத்துள்ளோம் ஆனால் சில வேலைகள் அவ்வாறே நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக இடை நடுவில் விடப்பட்டாலும் அதற்கான வேலைகள் தொடர்ந்தும் நடைபெறும்  என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

குவைத்தில் பாரிய தீ விபத்து 35 பேர் பலி

இன்றைய வானிலை மாற்றம்!

சகல தனியார் நிறுவனங்களை மீள் திறக்க இணக்கம்