அரசியல்உலகம்உள்நாடுவளைகுடா

இலங்கைக்குள் நீர்மூழ்கி கப்பல்கள்- அமெரிக்காவின் அவசர உதவியை நாடும் இலங்கை

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது. இதேவேளை, பிராந்தியத்தில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் சர்வதேச நாடுகளின் ஆய்வுக் கப்பல்களின் வருகையை கட்டுப்படுத்த உள்ளக சமுத்திரவியல் ஆய்வுக்குழுவை ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இலங்கை விஜயத்தின்போது கூடுதல் அவதானம் செலுத்தியிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் டொனல்ட் லூ, தேசிய பாதுகாப்பு ஆலோசரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க கூறுகையில்,

இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக விசேட உள்நாட்டு சமுத்திரவியல் ஆய்வுக்கு குழு ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு ஆய்வுக்குழுவை உருவாக்குவதன் மூலம் வேறு நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வரவேண்டிய தேவை ஏற்படாது. குறித்த சமுத்திரவியல் ஆய்வுக் குழுவை உருவாக்கும்போது ஏற்படக்கூடிய பயிற்சிகளின் அவசியம் மற்றும் இதர தேவைகளின்போது அமெரிக்காவிடம் ஒத்துழைப்பு வழங்க துணைச் செயலாளர் டொனல்ட் லூ இணக்கம் தெரிவித்தார்.  

உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் இராஜதந்திர ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொள்கிறது. இலங்கைக்கான விசேட சமுத்திரவியல் ஆய்வுக்குழு காணப்படுமாயின் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாது. மறுபுறம் அந்த நாடுகளின் தேவைக்கு ஏற்ப தரவுகளையும் எம்மால் வழங்க முடியும்.

ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையின் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஏற்கனவே கூறியுள்ளன. உள்நாட்டு ஆய்வுக்குழு ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் இந்திய பெருங்கடல் தரவுகளை ஏனைய நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்துவதற்கான மீளாய்வுகள் இடம்பெறுகின்றன.

அதே போன்று அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும்  நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கவும் அவற்றை தடுப்பதற்குமான பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது. இவை அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்க இணக்கம் தெரிவித்ததாக கூறினார்.

Related posts

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிப்பதற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

நாட்டிலிருந்து வெளியேறிய வைத்தியர்கள் – விடுக்கப்படும் எச்சரிக்கை.