இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புத்தளம் முன்னாள் காதிநீதிபதியின் விளக்கமறியல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரது பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை புத்தளம் – சிலாபம் பதில் காதி நீதிவானாக நியமிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு காதிநீதிவான் எம்.எம்.முஹாஜிரீன் புத்தளம் காதி நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணைகளைத் தொடர முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றிலிலுள்ள வழக்கு கோவைகள் மற்றும் ஆவணங்கள் முன்னாள் காதி நீதிவானிடமிருந்து கிடைக்கப்பெற்றதன் பின்பே பணியினை ஆரம்பிக்க முடியுமென உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை புத்தளம் காதி நீதி நிர்வாகப் பிரிவிலிருந்து புதிதாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக இருந்தால் எதிர்வரும் 12ஆம் திகதி புத்தளம் பள்ளி வீதியிலுள்ள முஸ்லிம் கலாசார மண்டபத்தில் காலை 8 மணிமுதல் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அங்கு சமூகமளித்து தன்னைச் சந்திக்க முடியுமெனவும் பதில் காதி நீதிவான் அறிவித்துள்ளார்.-