அரகலய போராட்ட காலத்தில் கண்டி அணிவத்த பிரதேசத்தில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மார்ச் மாதத்திற்கான வாடகைத் தொகை கிடைக்காத நிலையில், ரம்புக்வெல்லவின் சம்பளத்தில் இருந்து உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு மத்திய மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இது தொடர்பான கடிதம் ஏப்ரல் முதலாம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் மத்திய மாகாண சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இந்த வீட்டை பயன்படுத்துவதற்காக தனது சம்பளத்தில் 20 வீதத்தை மாகாண சபை கணக்கில் வரவு வைத்துள்ளார் என்றும், சுற்றாடல் அமைச்சராக இருந்த காலத்தில் உரிய தொகையை மத்திய மாகாண சபை உரிய முறையில் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, ரம்புக்வெல்ல தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளநிலையில், அவரது தனிப்பட்ட ஊழியர்கள் தற்போது மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
முன்னால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை இழந்துள்ளமையினால், அவரது அமைச்சுப் பதவியில் இருந்து குறித்த இல்லத்தை பயன்படுத்துவதற்கு மாகாண சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கோரி மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.