எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், எனினும் ஜூன் மாத இறுதியில் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடனான விசேட சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு முன்னதாக முடிவை மே மாத நடுப்பகுதியில் தெரிவிக்க ஜனாதிபதி திட்டமிடப்பட்ட போதிலும் அதனை பிற்போடவுள்ளார் என தெரியவந்துள்ளது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அந்தச் சந்திப்பின் பின்னர் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களின் சந்திப்பும் ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்றது.
ஜனாதிபதி வேட்புமனுத் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என இந்தக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டது. இங்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பிரதமர் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால, ஹரின் பெர்னாண்டோ, காஞ்சன விஜேசேகர, அனுர யாப்பா உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் குழு ரணில்-பசில் சந்திப்பின் பின்னர் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் தலைவர்கள் இருவரையும் சந்தித்துள்ளது.
வேட்புமனு தாக்கலின் பின்னர் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை அரசாங்கம் வழங்குவது சிக்கலாக இருக்கும் என்பதாலேயே ஜனாதிபதியின் வேட்புமனுத் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.