உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய அரசியல் கட்சிகள் கொழும்பில் ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்கள்

தேசிய அரசியல் கட்சிகள் கொழும்பில் ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதோடு இலட்சக் கணக்கான மக்களை அணிதிரட்டி தமது பலத்தினை வெளிப்படுத்துவதற்கும் முஸ்தீபு செய்து வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி

அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் மருதானையில் நடைபெறவுள்ளது.  கட்சியின் தலைவரும்  ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்களை அழைத்து வருவதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தரப்பை ஆதரிக்கவுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.அந்த வகையில், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாரூபவ் நிமல் லன்சா தலைமையிலான புதிய கூட்டணியின் அங்கத்தவர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

பொதுஜன பெரமுன 

இதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் பொரளை கம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கும் அதன் ஆதரவாளர்கள் அழைத்துவரப்படவுள்ளனர்.

அத்துடன், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பங்காளிக்கட்சிகள் பொதுஜன பெரமுனவுடனான உறவினை முறித்துக்கொண்டுள்ள நிலையிலும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்,  இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் நிலையிலும் பொதுஜன பெரமுன தனியானதொரு தரப்பாக இம்முறை மே தினத்தினை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தி

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு நகரசபை வளாகத்தில் நடைபெறவுள்ளது. அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமாச தலைமையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், மனோ கணேசன், பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான அணியினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நாட்டின் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரத்தில் கட்சியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தலைமையில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்திலும் அநுராதபுரத்திலும் நிலவும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பேரணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பில் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக பி.ஆர்.சி மைதானத்தில் பேரணி ஆரம்மாகவுள்ளது. இதேநேரம், தேசிய மக்கள் சக்தியின் நான்காவது கூட்டம் மாத்தறையில் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் நடைபெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்கள் “நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சி 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மைத்திரிபால சிறிசேன தரப்பின் ஏற்பாட்டில் மே தினக் கூட்டம் கம்பஹா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சாரதீ துஷ்மந்த மித்திரபால ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சி

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மே தினக் கூட்டம் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமை வகிக்கவுள்ளதோடு கட்சியின் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம், தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்புக் கூட்டம் பெரியகல்லாறு சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இ.தொ.க

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டக்கலையில் நடைபெறவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை அழுத்தமாக வலியுறுத்தும் வகையில் இந்த கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானும் பங்கேற்கவுள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கம்

பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்திற்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை திரட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விமல், உதய, தயாசிறி, ரொஷான் கைகோர்ப்பு

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ, திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கும் மேலவை இலங்கைக் கூட்டணி  தயாசிறி தலைமையிலான மனிதநேயக் கூட்டணி, ரொஷான் ரணசிங்க தலைமையிலான நாட்டை கட்டியெப்புவதற்கான ஊழல் எதிர்ப்பு முன்னணி ஆகியவற்றின் ஒன்றிணைவில் முன்னெடுக்கப்படும் மே தினக் கூட்டம் கிருலப்பனை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏனையவை

‘அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அணிதிரள்வோம்; சமத்துவத்தை நிலைநிறுத்திட ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பெருளில் சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியின் மே தினக் கூட்டம் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. அதேநேரம், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மே தினக் கூட்டம் முறக்கொட்டான்சேனையில் நடைபெறவுள்ளது.

மேலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் இருந்து பேரணி ஆரம்பமாகி சங்கிலியன் பூங்காவில் நிறைவடையவுள்ளதோடு பிரதான கூட்டமும் நடைபெறவுள்ளது.

kesari

Related posts

20ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு [UPDATE]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

மட்டு – பொலன்னறுவை ரயில் சேவை பாதிப்பு