சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கட்சி சாராத பொது வேட்பாளராகவே ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “தேர்தலுக்கு நேர்மையாக முகங்கொடுக்க அஞ்சி, மக்களை ஏமாற்றி வாக்கு வேட்டை நடத்துவதற்காக சிலர் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி வருகின்றனர்.
செய்ய முடியாத விடயங்களைக்கூட உறுதிமொழியாக வழங்கி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல்போயுள்ளது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி செய்யக்கூடிய விடயங்களையே கூறி வருகின்றது.
கசப்பாக இருந்தாலும் உண்மையைக் கூறுவது மேலானதாகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மட்டும் அல்ல அனைத்து கட்சிகளுடனும் எமக்குத் தொடர்பு உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனைவரையும் இணைத்துக்கொண்டு கட்சி சாராத வேட்பாளராகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் என குறிப்பிட்டுள்ளார்.