உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது ‘Sky bridge” சொகுசு ஹோட்டலை திறந்த ஜனாதிபதி

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம்

-ஜனாதிபதி

-கொழும்பு சுற்றுலா நகரமாக மாற்றப்படும்மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்ததென தெரிவித்த ஜனாதிபதி, சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

கொழும்பு ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் கட்டிடத்தை இன்று (25) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

காலி முகத்திடலுக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ITC ரத்னதீப ஹோட்டல் இந்திய ITC ஹோட்டல் குழுமத்தினால் இந்தியாவிற்கு வௌியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் முதலாவது கட்டிடமாகும்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ITC நிறுவனத்தை இலங்கைக்கு வரவேற்கிறேன். இது ஆசியாவின் முதலாவது ஐந்து நட்சத்திர ஹோட்டலான காலி முகத்திடல் ஹோட்டலுக்கு முன்பாக அமைந்துள்ளது. அதற்கு அருகில் இந்திய தாஜ் ஹோட்டலும் உள்ளது. சிங்கப்பூர் ஹோட்டலான சங்ரீலாவும் அருகில் அமைந்துள்ளது. அதற்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள ITC ஹோட்டலின் பின்புறத்தில் சினமன் கிரேண்ட் ஹோட்டலும் அமைந்திருக்கிறது.

இவை அனைத்தும் இலங்கையின் ஹோட்டல் தொழில்துறைக்குள் உள்ளடங்கும். ஒபரோய் ஹோட்டல் இலங்கையில் அமைக்கப்பட்டு முதலாவது நகர ஹோட்டலாக மேம்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீண்ட காலத்திற்கு பின்னர் இந்தியாவே இங்கு சுற்றுலா ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. அதனால் இந்தியா, சிங்கப்பூரை தளமாக கொண்ட ஹோட்டல்களும் இங்கு அமைந்துள்ளன. ஆசியாவில் எங்கும் இவ்வாறானதொரு இடத்தை நீங்கள் காண முடியாது.

இதனால் கொழும்பு நகரம் சுற்றுலா கேந்திரமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவிற்குள் நிர்மாணிக்கப்பட்ட 10,000 அறைகளை கொண்ட ஹோட்டல் கட்டிடத்திற்கு பின்னர் அடுத்தபடியாக அவர்கள் செல்லக்கூடிய சிறந்த இடமாக ITC நிறுவனம் இலங்கையை தெரிவு செய்துள்ளமை சிறப்பம்சமாகும்.

அவர்களால் மேம்படுத்தக்கூடிய பல இடங்கள் இலங்கையில் அமைந்துள்ளன. அடுத்த தசாப்தத்தில் இலங்கை ஜனாதிபதி மாளிகை மாதிவெலவிற்கு கொண்டு செல்லப்படும். அத்தோடு கொழும்பு குடியரசு சதுக்கம்,கடற்படை தலைமையகம், பழைய இறங்குதுறை, சுங்கத் தலைமையகம், தபால் நிலையம் என அனைத்தையும் கொழும்பு சுற்றிலா நகரத்தின் அங்கமாக மேம்படுத்த முடியும்.

இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையை நீங்கள் மறந்திருக்கப்போவதில்லை. ஜனாதிபதியின் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகவே மக்களில் அதில் பங்கெடுத்தனர். இருப்பினும் அந்த பொருளாதார சரிவிலிருந்து இரண்டு வருடங்களில் நாட்டை மீட்டெடுக்க எம்மால் முடிந்தது.

தற்போதும் கொழும்பு சுற்றுலா நகரமாக மாறியுள்ளது. நட்சத்திர ஹோட்டல்கள் பல காணப்படுவதால் சுற்றுலா வியாபாரத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியும். சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான அஸ்திரமாகவும் அது அமைந்திருக்கும். சுற்றுலா வியாபாரத்தினால் இலங்கையை துரிதமாக மீட்கலாம். அதற்கான வசதிகளை வழங்க நாம் தயார்.

அவ்வாறானதொரு மக்கள் போரட்டம் மீண்டும் ஏற்படாதவாறான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். அதற்கு தேவையான திட்டங்களை நாம் செயற்படுத்துவோம். இந்த திட்டங்களால் பொருளாதாரத்தையும் நிலைப்படுத்த முடியும். அதனால் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும்.

பிரதமர் தினேஷ் குணவர்தன,முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாபய ராஜபக்‌ஷ, நீதி அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவீ கருணாநாயக்க,இந்திய உயர்ஸ்தானிகர் சந்துஷ் ஜா, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி சவேந்திர சில்வா, ITC ரத்னதீப ஹோட்டல் குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளர் சஞ்ஜீவ் ஜூரி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Related posts

நீர் தொட்டியில் வீழ்ந்து பெண் குழந்தை பலி!

மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்