எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தெஹ்ரானில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்தாலும் அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய எல்லைகளுக்கு வெளியே இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இதில் 10க்கும் மேற்பட்ட க்ரூஸ் ஏவுகணைகள் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த தாக்குதலில் 7 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
ஈரான் இந்த தாக்குதலுக்காக 200 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலை தடுத்து நிறுவத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் நிற்க உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.