உள்நாடு

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார்.

அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் அர்பணிப்பாக பணியாற்றுவதாகவும் சலிவன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, இந்து-பசுபிக் வலயத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான இருநாடுகளினதும் அர்பணிப்பையும் வலியுறுத்துகிறது.

Related posts

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் பிடியில்..

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பேருந்து நடத்துனர்கள் கடும் சிரமத்தில்