உள்நாடு

“தமிழ்ப் பொது வேட்பாளர்“ ராஜபக்‌ஷ- இனவாத சக்திகள் பின்புலம்?

“ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முன்மொழிவு வருகின்றபோது எங்களுக்குப் பாரிய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இதன் பின்னால் ராஜபக்சக்கள் இருக்கின்றார்களா? தீவிரவாத – இனவாத சிங்கள சக்திகள் இருக்கின்றார்களா? போன்ற கேள்விகள் எழுகின்றன.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் தொடர்பில் வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறங்கும்போது அதை மையமாக வைத்தே தீவிரவாத – இனவாத சிங்கள சக்திகள் ஒன்றுசேர்ந்து அவர்களுடைய கைகளைப் பலப்படுத்துகின்ற சம்பவம் நிகழலாம்.

ஆகவே, தோற்றுப்போயிருக்கும் ராஜபக்ச தரப்பினருக்குத் திரும்பவும் உயிரூட்டும் ஒரு செயலாகக்கூட அது அமையலாம்.

இந்த ராஜபக்சக்களே முன்னைய காலங்களில் இப்படியான ஒரு யுக்தியைக் கையாண்டு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஒவ்வொரு தேர்தல்களிலும் நிறுத்தியும் இருக்கின்றார்கள்.

இப்படி நிறுத்திவிட்டு இப்பொழுது புலி வந்துவிட்டு என்று சொல்லி புரளியையும் கிளப்புவார்கள்.

ஆகவே, இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முன்மொழிவு வருகின்றபோது எங்களுக்குப் பாரிய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இதன் பின்னால் ராஜபக்சக்கள் இருக்கின்றார்களா? தீவிரவாத – இனவாத சிங்கள சக்திகள் இருக்கின்றார்களா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

எனினும், தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்னமும் பேசவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தை நாங்கள் சாதகமாகப் பரிசீலிப்போம் என்று என்னால் இப்போது கூற முடியாது.” – என்றார்.

Related posts

பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் – சுற்றறிக்கை முரணானது

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விமான படை மற்றும் கடற்படையினர்

இதுவரை 2,064 பேர் பூரணமாக குணம்