உள்நாடு

(ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் அமைச்சரவைப் பத்திரம் – ஜீவன் தொண்டமான்

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

 

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 

முஸ்லிம் மக்களின் உணர்வுகள், மத நம்பிக்கை என்பன கருத்திற்கொள்ளப்படாமல் கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த சமூகத்தினர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அதற்கான மன்னிப்பு கோருகின்றேன் எனவும் அமைச்சர் கூறினார்.

 

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நேற்று (02.04.2024) நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 

“ கடந்த வருடம் ஜனவரி மாதமே நான் அமைச்சராக பதவியேற்றேன். எனினும், இதுவிடயத்தில் நீர்வழங்கல் அமைச்சு தொடர்புபட்டிருந்ததால் மன்னிப்பு கோருகின்றேன். அதேபோல அக்காலப்பகுதியில் இவ்விடயதானம் தொடர்பில் அமைச்சராக இருந்தவர்கள் இதற்கு பொறுப்புகூறவேண்டும்.

 

கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதால் நிலத்தடி நீருக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது, நீர்வளம் மாசுபடாது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி இருந்தபோதிலும், விஞ்ஞானப்பூர்வமான விடயங்களைக் கருத்திற்கொள்ளாமல் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டது.

 

நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மேற்படி திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. துறைசார் நிபுணர்களால் தவறான கொள்கையே கடைபிடிக்கப்பட்டுள்ளது என ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.

 

எனவே, முஸ்லிம் மக்களிடம் அரசு முறையாக மன்னிப்பு கோர வேண்டும் என்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும்.” – என்றார்.

 

ஊடக செயலாளர்

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு

Related posts

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

‘சினோபார்ம்’ இலங்கை சீனர்களுக்கே [VIDEO]

கோட்டாபய இராஜினாமா