உள்நாடு

வித்தியா கொலையாளி மரணம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சிவலோகநாதன் வித்தியா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் தவகுமார் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அவசர நோய் நிலைமை காரணமாக மார்ச் 31 ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பூபாலசிங்கம் 39 வயதுடையவர் எனவும் அவர் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பாக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் பல்லேகெல தும்பர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட அவர் அவ்வப்போது சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையிலும் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்..

சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய குழு தீர்ப்பளித்தது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் ஆகியோர் குறித்த தண்டனையை அறிவித்தனர்.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வித்தியா சிறுமி கொல்லப்பட்டதுடன் அது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை வடக்கிலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

இன்று நண்பகல் 12 மணி முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

சமய கருத்துக்களை திரிபுபடுத்துதலை அவதானிக்க குழு – அமைச்சரவை அங்கீகாரம்