ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஆலோசனைகளைக் கோர வேண்டியதில்லை. பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்து அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனையை ஜனாதிபதி பரிசீலனை செய்வதாகவும் தற்போது குறிப்பிடப்படுகிறது.பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும், பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் ஜனாதிபதி பொதுஜன பெரமுனவிடம் ஆலோசனை கோர வேண்டிய அவசியம் கிடையாது. பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் 16 நாட்களுக்கு குறையாமலும், 21 நாட்களுக்கு மேல் அதிகரிக்காமலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் அதனை தொடர்ந்து 42 நாட்களுக்குள் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது என்றார்.