தலைவர் அஷ்ரப் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் எமக்கு இருக்கின்றது. ஆனால் முஸ்லிம் மக்களுக்கான தனியான அரசியல் கட்சியொன்றை உருவாக்கியதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன, இன்று தலைவர் அஷ்ரப் உருவாக்கிய “தனியான முஸ்லிம் அரசியல்” எங்கெல்லாம் சிதறுண்டு இருக்கின்றது என்பதைப் பாருங்கள். அதனால் யார் நன்மையடைந்து கொண்டிருக்கின்றார்கள் என்று பாருங்கள் , அதனால் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? என கனடாவில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மக்களை சந்தித்த போது, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அணுரகுமா திசாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார் .
கனடாவுக்கு வருகை தந்திருக்கும் அனுரகுமார திஸாநாயக்காவிடம் “முஸ்லிம் மக்களிடமிருந்து நீங்கள் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்” என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தார்.
தேசிய மக்கள் சக்தி இனரீதியான அரசியலுக்கான அமைப்பு அல்ல; அரசியல் என்பது கடமை கிடையாது, அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுகின்றவர்கள் ஒருபோதும் விஷேடமானவர்கள் அல்ல, அவர்களும் சாதாரண மக்களே; இந்த அடிப்படையில் நாம் ஒரு அரசியல் முன்மாதிரியொன்றை நிறுவ முனைகின்றோம். அரசியல் மக்களுக்காக நிறைவேற்றப்படுகின்ற ஒரு பொறுப்பு. இந்த செய்தியைப் புரிந்துகொள்ளுங்கள்.
இலங்கையின் பல பிரதேசங்களில் இருந்தும் முஸ்லிம் மக்கள் குழுக்களாக எம்மை வந்து சந்திக்கின்றார்கள், எம்மோடு இணையவேண்டும் என்று வருகின்றார்கள், அவர்களுக்கு வித்தியாசமான எதிர்பார்ப்புகள் இருக்க முடியும். ஆனால் நாம் அவர்கள் எல்லோரிடமும் தெரிவிப்பது எமது அரசியலைப் புரிந்துகொள்ளுங்கள், அந்த அரசியலோடு உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், இது இதுவரைகாலமும் நீங்கள் செய்துவந்த அரசியல் அல்ல, இதுவரைகாலமும் நீங்கள் அனுபவித்த அரசியல் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இதனையே முஸ்லிம் மக்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம். என்றார்