உள்நாடு

வெடுக்குநாறி சம்பவம்: கண்டுகொள்ளாத மனித உரிமைகள் அமைப்பு – அம்பிகாவின் தெளிவு

வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை முறைப்பாடளித்ததன் பின்னரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்னமும் சென்று பார்வையிடாத நிலையில், இவ்வாறான சம்பவங்களில் முறைப்பாடின்றியே கைதிகளை பார்வையிடுவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டென முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

அதுமாத்திரமன்றி, ஆலய பூசகர் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேர் கடந்த 5 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கைது சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்திலும், அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திலும் முறைப்பாடு அளித்த போதிலும், ஆணைக்குழு அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது குறித்த தெளிவுபடுத்தலை பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரி.பி.தெஹிதெனியவையும், வவுனியா பிராந்திய அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷனவையும் தொடர்புகொள்ள முற்பட்ட போதிலும், அது சாத்தியமாகவில்லை.

அதனையடுத்து, ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரி.தனராஜிடம் வினவியபோது, இது பற்றிய தகவல்களை நாளைய தினம் அறியத்தருவதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்டவாறான சம்பவங்களின்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படவேண்டிய விதம் மற்றும் அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை தொடர்பில் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனிடம் வினவினோம்.

முதலாவதாக கைது இடம்பெறும்போது அதற்குரிய தெளிவான காரணம் காணப்படல், அக்காரணத்தை கைது செய்யப்படும் நபரிடம் கூறுதல், கைதுசெய்யப்படுபவர்களில் பெண்களும் உள்ளடங்கும் பட்சத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கட்டாயமாக இருத்தல், கைதுசெய்யப்படும் நபர் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பது பற்றி அவரது குடும்பத்தாருக்கு அறியத்தரல், அழைத்துச்செல்லப்பட்ட இடத்துக்கு வருகைதரும் குடும்பத்தார் கைதுசெய்யப்பட்ட நபரை பார்வையிடுவதற்கு இடமளித்தல் என்பன உள்ளடங்கலாக உரிய செயன்முறை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

அதுமாத்திரமன்றி, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது அநாவசியமான அழுத்தம் மற்றும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமையும், அங்கு வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்கள் தட்டிவிடப்பட்டமை போன்ற நடவடிக்கைகளும் ஏற்புடையவையல்ல எனவும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.

மேலும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் எந்தவொரு தரப்பினரும் முறைப்பாடு அளிக்கப்படாமலேயே சிறைச்சாலைக்கு சென்று கைதுசெய்யப்பட்டவர்களை பார்வையிடுவதற்கும், அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும், அவர்கள் தாக்கப்பட்டிருப்பின் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துமாறு வலியுறுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி விரைவில் சீனா விஜயம்

பாடசாலைகள் மீளத் திறக்க தீர்மானம் இல்லை

தற்போது அவசர அமைச்சரவைக் கூட்டம்