உள்நாடு

எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்! தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தாஜுடீன்

நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஒரே நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து, அரசு ஏமாற்றி வருகின்றது. எங்களது விடயத்தில் அரசு பாகுபாடாக நடந்துள்ளது அப்பட்டமான உண்மை. இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் நாங்கள் தொடர் போராட்டம் ஒன்றுக்கு செல்வதைத்தவிர வேறு வழியில்லை என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில், (12.03.2024) அதாவது நேற்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்த திடீர் போராட்டம் இன்றும் (13.03.2024) அடையாள வேலை நிறுத்தம் நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் தொடர்கின்றன.
கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் அவர்களின் தலைமையிலும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாம் நாளிலும் பெரும் அளவிலான ஊழியர்கள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றும் இடம்பெற்ற இப்போராட்டத்தில் வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பனபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related posts

கல்கிஸ்ஸை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது

“இந்நாட்டுக்கு தற்பெருமை தேவையில்லை” – சஜித்

முதியோருக்கான கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானம்