எமது நாட்டில் உள்ள மத்ரசாக்களை பதிவு செய்ய மாத்திரம் முஸ்லிம் கலாசார விவகாரத் திணைக்களம் இருக்கிறது. ஆனால் அவற்றை மேற்பார்வை செய்ய எந்த அமைப்பும் இல்லை. கட்டுப்பாடுகளை விதிக்க எவரும் இல்லை. மத்ரசாக்களை நடத்துவதற்கான விதிகள் ஒழுக்க நெறிக் கோவைகள் சுற்றறிக்கைகளை விதித்து பரிபாலிக்க எவரும் இல்லை.
உலமா ஒருவர் செல்வந்தர் ஒருவரைப் பிடித்துக் கொண்டு மத்ரசாவை ஆரம்பித்துக் கொள்கிறார். அந்த உலமா தனது உலமா நண்பர்களை அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களாக அதாவது உஸ்தாத்களாக ஆக்கிக் கொள்கிறார். குறிப்பிட்ட உலமா மத்ரசா அதிபராக முதலில் தன்னை தானே நியமித்துக்கொள்வார். அவரது தகுதியைப் பார்க்க எவரும் இல்லை. பாடசாலைகளில் ஒரு அதிபராக வருவதற்கு பல பரீட்சைகளில் சித்தியடைய வேண்டும். அதற்கு அனுபவமும் வேண்டும். அனுபவக் காலத்தை நிறைவு செய்தால் தான் அதிபர் பரீட்சை எழுதலாம். சித்தியடைந்தால் தான் அதிபராகலாம்.
ஆனால் ஆரம்பிக்கப்படும் ஒரு மத்ரசாவுக்கு பரீட்சையும் தேவையில்லை. அனுபவமும் தேவையில்லை. தானே தன்னை நியமித்துக் கொண்டு புதிய மத்ரசாவொன்றை ஆரம்பித்து விடலாம்.
இதற்கு தேவை ஒரு தனவந்தரே. இதற்கு செலவளிக்க இவர் முன்வருவார். அந்த தனவந்தர் கொடுக்கும் பணம் போதாத போது முதலில் அந்த ஊரிலும் பின் நாடெங்குமுள்ள ஏனைய முஸ்லிம் ஊர்களிலும் கோவைகளையும் டிக்கட்களையும் காட்டி பணம் சேர்ப்பார்.
அதிலும் ஒரு விஷேடம் உண்டு. மக்களிடமும் வெளியூர்களிலும் பணம் சேர்ப்பதற்கு அந்த அதிபரோ தனவந்தரோ செல்வதில்லை. சில மத்ரசாக்களில் கெளரவமாக இருக்க வேண்டிய உஸ்தாத்களை அனுப்புவர். இன்னும் சில மத்ரஸாக்களில் படிக்கும் மாணவர்களை அனுப்புவர். இவ்வாறு செல்பவர்கள் சில தினங்கள் தங்கி வருவதுமுண்டு. இவர்களின் பாதுகாப்பை எவருமே சிந்திப்பதில்லை. அங்கு சென்றிருக்கும் நிலையில் விபத்துகள் நடந்தால் என்ன செய்வது. அல்லாஹ்வின் பாதையில் பணம் சேர்க்கச் சென்றார்கள் என்று கூறித் தப்பலாமா. பயணம் சென்றிருந்த மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவங்களும் இல்லாமல் இல்லை. விபத்துகளில் அகப்படாமலும் இல்லை.
இப்போது மத்ரசாக்கள் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். ஒரு ஊருக்கு ஒன்றல்ல பல மத்ரசாக்கள் இருப்பதை நாம் காண்கிறோம். காரணம் மத்ரசா ஆரம்பிப்பதற்கு எந்த கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லாததே. சில பிரதேசங்களில் தஃவா கொள்கைக்கு ஏற்ப தனித்தனி மத்ரசாக்கள் உண்டு. ஒரே இஸ்லாத்தைப் பின்பற்றும் எம்மிடையே ஒற்றுமை இல்லை.
இன்னும் சில ஊர்களில் புதிய மத்ரசா வர காரணங்கள் உண்டு. இருந்த மத்ரசா நிர்வாகிகளோடு முரண்பட்ட உஸ்தாத்கள் அங்கிருந்து பிரிந்து சென்று தான் ஒரு புதிய மத்ரசாவை அமைத்து விடுவார். அதே ஊரில் முடியாவிட்டால் பக்கத்து ஊரில் அல்லது வேறு ஊரில் அமைத்துக்கொள்வார். இதற்கு ஒரு புகழ் விரும்பும் தனவந்தரை தேடிக்கொள்வார். கட்டுப்படுத்த எவரும் இல்லாததால் எங்கும் எத்தனையையும் அமைத்துக்கொள்ளலாம். தகுதிகள் அனுபவம் தரங்கள் விதிக்க எவரும் இல்லாததால் யாரும் தட்டிக் கேட்க முடியாது.
இந்த மத்ரசாக்களுக்கு பொதுவான ஒரு பாடத்திட்டம் இல்லை. அங்குள்ள உஸ்தாதுகளோ அதிபரோ கூறுவது தான் பாடத்திட்டம். பரிந்துரைக்கப்பட்ட கிதாபுகள் இல்லை. பொதுவான பரீட்சை இல்லை. இந்த உஸ்தாத்துகளே வினாக்களை கொடுப்பர். விடைத்தாள்களை திருத்துவர். புள்ளி வழங்குவர். சித்தியடையச் செய்வர்.
பொதுவான பாடத்திட்டமொன்று இல்லாது இருப்பதாலும், தற்போதுள்ள விடைத்தாள் திருத்தும் முறையினாலும் மத்ரசாக்களிலிருந்து வெளியாகும் உலமாக்களின் தரமும் திறனும் சமமாக இல்லை. இதில் கட்டாயமாக மாற்றம் வேண்டும்.
மிகவும் கவலைப்பட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. ஆறு மாதம் தொடர்ந்து ஆங்கில வகுப்புக்கு சென்ற ஒருவன் ஆங்கிலம் நன்றாக பேசுகிறான். ஆனால் ஐந்து ஆறு வருடங்கள் அரபு மொழியைக் கற்ற இரண்டு மாணவர்கள் சந்தித்தால் அரபு மொழியில் பேசுவதை நாம் காண்பதில்லை.
இன்று ஏதாவது பிரச்சினைகள் வந்து விட்டால் மட்டுமே இந்த மத்ரசாக்கள் பற்றி பேசுவர். ஹஜ் பயண ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டு பள்ளிச் சொத்துகள் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை வக்பு சபைக்குச் சாற்றி விட்டு நிற்கும் முஸ்லிம் விவகாரத் திணைக்களமும் அண்மைக்காலங்களில் மத்ரசா பற்றி பேச ஆரம்பித்துள்ளது. இது நல்ல விடயமே. ஆனால் இதனை இடையில் நிறுத்தக் கூடாது.
திணைக்களம் மத்ரசா பாடத்திட்டம் பற்றி பேசுகிறது. பரீட்சைகள் பற்றி பேசுகிறது. இவை அறிக்கைகளுடன் மட்டும் முடிந்து விடவும் கூடாது.
அர்த்தமற்றதாகவும் ஆகிவிடக் கூடாது. உரியவர்களின் ஆலோசனையை பெற்று முறையாக நிரந்தரமாக செய்ய வேண்டும்.
அண்மையில் மத்ரசா மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டமை, இன்னுமொரு மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பாக செய்திகள் வந்ததும் திணைக்களம் மீண்டும் விழித்துக்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட மாணவன் கொலை தொடர்பாக திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. இக்குழுவின் அறிக்கையும் சிபாரிசுகளும் இச்சம்பவத்தோடு மாத்திரம் நின்றுவிடாமல் ஒட்டுமொத்த மத்ரசாக்களையும் மறுசீரமைப்பதை நோக்கமாக கொண்டதாக இருக்க வேண்டும்.
மத்ரஸா பதிவு, பாடத்திட்டங்கள், மத்ரசாவுக்கு நியமனம் பெறும் அதிபர் உஸ்தாத்மார் தகுதிகளை நிர்ணயித்தல், இவர்களுக்கான பதவி உயர்வு, பரீட்சைகள், மாணவர்களை சேர்ப்பதற்கான வயதெல்லை, அவர்கள் பெற்றிருக்க வேண்டிய பாடசாலைக் கல்வியின் தரம், மத்ரஸாக்களுக்கான பொது தவணைகள், விடுமுறை தொடர்பான சிபாரிசுகள், மெளலவிப் பட்டத்திற்கான பரீட்சையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் பரீட்சையாக எப்படி மாற்றுவது?, மெளலவிப் பரீட்சை பெறுபேறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு சமமாக்க அரசாங்க வர்த்தமானியை வெளியிட எடுக்க வேண்டிய முயற்சிகள், மெளலவிப் பரீட்சைக்கு மேல் இரண்டு வருடங்கள் கற்ற பின் க.பொ.த. உயர் தரத்திற்கு சமனான பரீட்சையை எவ்வாறு பெறுவது என்பன பற்றிய ஆலோசனையை இக்குழு தர வேண்டும்.
அத்தோடு மத்ரசாக்களுக்கு தேவையான புதிய சுற்றறிக்கைகள் விதிகள் திணைக்களம் மூலம் உருவாக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக க வெளியிடப்பட வேண்டும், உஸ்தாத்மாருக்கான ஒழுக்க விதிகள் ஒழுக்கக் கோவைகள் அமைக்கப்பட வேண்டும். அதே போன்று மாணவர்களுக்கான ஒழுக்கக் கோவையும் அமைக்கப்பட வேண்டும்.
இவற்றை பரிபாலிக்கவும் விசாரணை செய்யவும் திணைக்களத்தில் வக்பு சபை போன்ற அதிகாரமும் அரச அங்கீகாரமும் உடைய வேறான சபையொன்று நியமிக்கப்பட வேண்டும்.
ஒழுக்க விதிகளை மீறும் உஸ்தாத்மாரை அந்த மத்ரசாக்களில் இருந்து நீக்கவும் அவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு வேறு மத்ரசாக்களுக்கு நியமிக்காமல் இருக்கவும் உத்தரவிடும் சபையாக இந்த சபை அதிகாரம் பொருந்தியதாக இருக்க வேண்டும். –
சட்டத்தரணி ஏ.எம்.வைஸ் – VV