நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
பயிர்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, போட்டித் தன்மைமிக்க விவசாயக் கைத்தொழில் துறையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவின் அழைப்பையேற்று இன்று (02) தம்லகமுவ பிரதேசச் செயலாளர் பிரிவின் கலமெடியாவ கிராமத்தின் நெல் அறுவடையைக் கண்காணிக்கச் சென்றிருந்த வேளையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
தம்பலகமுவ பிரதேச செயலகப் பிரிவின் 9000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பெரும்போகத்தின் போது கலமெட்டியாவ கிராம சேவகர் பிரிவில், மாத்திரம் 672 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வருகையுடன் கட்சி, நிற பேதமின்றி அங்கு கூடியிருந்த பிரதேச மக்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினர். அந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு உரிய அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இப்பிரதேச விவசாயிகள் தமது விளைச்சலுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை என்றும், அதனைப் பெறுவதற்கான கால்வாய் ஒன்று இல்லாமல் இருப்பதையும் விவசாய நிலங்களைப் பாதுகாக்க யானை வேலியை அமைத்துத் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரினர்.
அதற்காக வெண்டர்சன் குளம் தொடக்கம் புலியுத்துகுளம் வரையான ஒன்பது ஏரிகளுக்கும் நீர் அனுப்பக்கூடிய வகையில் கால்வாய் அமைத்து விவசாய நடவடிக்கைகளுக்கு போதிய நீரைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் விவசாய செயற்பாடுகளை மையப்படுத்தி அதனை நிர்மாணிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
அத்துடன், தம்பலகமுவ பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட 94 ஆவது பிரிவு முதல் பாலம் வரையான யானை வேலி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் வரையில் வீதி விளக்குகளை பொருத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், விவசாயக் குடும்பங்களுக்கு இலவச காணி உறுதி பத்திரம் வழங்குதல், விவசாயப் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இளம் விவசாயத் தொழில் முனைவோருக்கு காணிகளை வழங்குதல், பால் உற்பத்தியாளர்களுக்கு மேய்ச்சல் நிலத்துக்குப் போதுமான காணிகளை ஒதுக்கீடு செய்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பிலான கோரிக்கைகளுக்கான தீர்வுகளை விரைந்து வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:
இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்திற்கு மேலதிகமாக, இந்தியாவில் இருந்து குழாய் மூலம் எரிபொருளை விநியோகிக்கும் திட்டமும் உள்ளது. சுற்றுலா மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி முதலீட்டு வலயங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தை கிழக்கின் பிரதான துறைமுகமாக அபிவிருத்தி செய்து அதன் ஊடாக தென்னிந்தியாவின் உற்பத்திகளை பரிமாறிக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் திருகோணமலை மாவட்டத்தில் முழுமையான அபிவிருத்தியை ஏற்படுத்தும்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் விவசாய தொழில், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி கைத்தொழில் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கிறோம். இப்பகுதியில் விவசாயத் தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த யோசனையைப் பெறவே இன்று இங்கு வந்தோம். இது தொடர்பாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி அறிந்து கொண்டேன். இது தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு ஆளுநருக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். இந்த அபிவிருத்தித் திட்டப் பணிகள் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.
விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். போட்டித்தன்மை மிக்க விவசாயத் தொழில் துறையை உருவாக்க வேண்டும். சிறிய குளங்களை புனரமைத்து, அவற்றைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், பயிர்ச்செய்கை மற்றும் அறுவடைக் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் விவசாய நிலையங்களை விவசாய நவீனமயமாக்கல் மத்தியஸ்தானங்களாக கட்டமைக்க வேண்டும்.
அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு விவசாய சேவை நிலையம் என்ற அடிப்படையில் 25 நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதரவை அமெரிக்காவின் பில் மெலிண்டா கேட்ஸ் மன்றமும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியாவும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்கால இளைஞர்கள் சமூகம் ‘ஸ்மார்ட் அக்ரிகல்சரில்’ மீதே ஆர்வம் காட்டுகின்றனர். இரண்டு ஏக்கர் காணியை வழங்குவதால் மாத்திரம் விவசாயத்தில் ஈடுபடமாட்டர்கள். எனவே, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர்’ மூலம் அவர்களை அணுக வேண்டும்.
முன்னைய காலத்தைப் போல் நாட்டிலிருந்து பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நிலையை அடைய வேண்டும். சுதந்திரத்திற்குப் பின்னர் நாம் ஏற்றுமதியில் போதிய கவனம் செலுத்தவில்லை. இப்போது நாம் அதை ஆரம்பிக்க வேண்டும். இந்த நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும். நன்னீர் மீன்பிடி மற்றும் சுற்றுலா வியாபாரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
இலவச காணி உறுதிப்பத்திரம் வழங்கும் ‘உறுமய’ திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். இது மூன்று பகுதிகளாக செயல்படுகிறது. அதன்படி, இந்த வருடம் பிரச்சினைகள் அற்ற வகையில் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டிருக்கு, சுவர்ண பூமி, ஜயபூமி காணி உறுதிபத்திர உரிமையாளர்களுக்கு முதலில் இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும். இதற்கிடையில், அளவீடு செய்யப்படாத காணிகளை அளவிடும் பணியும் முன்னெடுக்கப்படும். காணி பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் எதிர்பார்கிறோம். அதன்படி ஒரு பிரதேச செயலகத்தில் நாளாந்தம் 500-1000 காணி உறுதிப்பத்திரங்களை குறைந்த பட்சமாக பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருக்கிறோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
வண. அக்கரகம விமலஜோதி தேரர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண பிரதமச் செயலாளர் ஆர். எம். பி. எஸ்.ரத்நாயக்க, திருகோணமலை மாவட்ட செயலாளர் சமிந்த ஹெட்டியாராச்சி, கிழக்கு மாகாண ஆணையாளர் என். மணிவண்ணன், திருகோணமலை மாவட்ட உதவி ஆணையாளர் எஸ். பார்த்தீபன், தம்பலகமுவ பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி, விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
video