உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சுமார் 5 வருடங்கள் அண்மித்த நிலையிலும் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உட்பட ஏனைய விசாரணைகளின் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. என்றாலும் தாக்குதலின் சூத்திரதாரி இதுவரை கண்டறியப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை காரணம் காட்டி மஹர சிறைச்சாலை வளாக நூற்றாண்டு கால வரலாறு உடைய பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளால் கையேற்கப்பட்டு இன்று சிறைச்சாலை ஊழியர்களின் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்கள், குர்ஆன் பிரதிகளுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குர்ஆன் பிரதிகள் கூட அவற்றுள் அடங்கியிருக்கும் கருத்துகள் தொடர்பில் ஆராயப்படுகின்றன. முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிவரும் இவ்வாறான சவால்கள் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
ஏனைய மத நூல்களின் இறக்குமதியின் போது விதிக்கப்படாத இவ்வாறான கடுமையான நிபந்தனைகள் குர்ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய மத நூல்கள் இறக்குமதியின் போது மாத்திரம் ஏன் விதிக்கப்படுகின்றன? முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு வருகிறார்களா?
அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமக்குத் தேவையான குர்ஆன் பிரதி அல்லது இஸ்லாமிய நூல்களை எடுத்து வரும் போது அவை சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகின்றன. இலங்கையில் முஸ்லிம்களுக்குத்தான் இந்த நிலைமை. எனவே பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிசாத் பதியுதீன் கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கருதி வெளிநாடுகளிலிருந்து குர்ஆன் பிரதிகளையும், இஸ்லாமிய நூல்களையும் நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்க வேண்டாம் என பாதுகாப்பு செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இக்கடிதத்தை தற்போதைய ஜனாதிபதி மீளப்பெற்று குர்ஆன் பிரதிகள், இஸ்லாமிய நூல்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ரிசாத் பதியுதீன் கோரியுள்ளார்.
மேலும் நுவரெலியா நோர்வூட் தோட்டத்திலுள்ள பள்ளிவாசல் காணியில் இஸ்லாமிய நிறுவனம் ஒன்றினால் கட்டி முடிக்கப்பட்ட ஐந்து வீடுகளை அப்பகுதி பிரதேச செயலாளர் வழக்குதாக்கல் செய்து அரசு டமையாக்கியிருக்கிறார். இப்பகுதி மக்கள் நீதிமன்றம் சென்று போராடுமளவுக்கு பணமில்லாதவர்களாகையால் அவ்வீடுகள் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது எனவும் ரிசாத் பதியுதீன் சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், ராமேஸ்வரன் எம்.பி. ஆகியோருக்கு கடிதம் அனுப்பியும், தொலைபேசி மூலம் பேசியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த பள்ளிவாசல் நிர்வாக சபை அங்கத்தவர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவியது.
இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் தொடர்பு கொண்டோம். அவர்களுக்கு கடிதம் அனுப்பினோம். பிரதேச அரசியல்வாதிகளையும் தொடர்புகொண்டோம். ஆனால் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் இவ்விவகாரத்தை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவருக்கு நன்றி கூற வேண்டும்.
பள்ளிவாசலுக்குச் சொந்தமாக 1 ஏக்கர் காணியிருக்கிறது. இக்காணியில் விவசாயம் செய்தோம். அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்தே அக்காணியில் வீடுகளைக் கட்டுவதற்குத் தீர்மானித்து 6 வீடுகளைக் கட்டி இப்பகுதி மக்களுக்கு 2500 ரூபா வாடகைக்கு வழங்கினோம்.
ஆனால் பிரதேச செயலாளர் இதற்கெதிராக வழக்கு தாக்கல் செய்து வீடுகளை அரசுடமையாக்கிக் கொண்டார். தற்போது பிரதேச செயலகத்தின் பணியாளர்கள் இந்த வீடுகளில் தங்கயிருக்கிறார்கள். நாம் பிரதேச அரசியல்வாதிகளிடம் நீதி கோரியிருக்கிறோம் என்று கூறினார்.
மஹர சிறைச்சாலை பள்ளிவாசல்
மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலான தற்போதைய நிலைமை தொடர்பில் பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்க தலைவர் ஹபீல் லக்ஸானவை தொடர்புகொண்டு வினவியது.அவர் விளக்கமளிக்கையில்,
‘2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு பள்ளிவாசல் மூடப்பட்டதிலிருந்து இப்பகுதி முஸ்லிம்கள் தமது சமயக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அருகில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பல மைல்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இப்பகுதி மக்களுக்கு பள்ளிவாசலொன்றினை அமைத்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி நீதியமைச்சர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு சபை, சிறைச்சாலை திணைக்களம் என்பனவற்றிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
நியாயம் கோரி வழக்குத் தாக்கல் செய்வதற்கு எம்மிடம் பணம் இல்லை. 2019இல் வக்பு ட்ரிபியுனலில் வழக்கொன்று நடந்தது. சிறைச்சாலை ஆணையாளருக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவிக்கப்பட்டும் எதுவும் நடைபெறவில்லை. தற்போதைய வக்பு சபைக்கும் எமது நிலைமையை அறிவித்துள்ளோம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டுள்ளோம். ஆனால் தீர்வு தான் கிடைக்கவில்லை.
பள்ளிவாசல் பரிபாலன சபை தற்போது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கவுள்ளோம். மூடப்பட்டுள்ள பள்ளிவாசலுக்குப் பதிலாக சிறைச்சாலை காணியில் எமக்கு இடம் ஒதுக்கித் தருமாறு கோரவுள்ளோம். நாங்களே புதிதாக பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ள தீர்மானித்துள்ளோம்’ என்றார்.
ராகம வைத்தியசாலை பள்ளிவாசல்
ராகம அரசாங்க வைத்தியசாலையில் இயங்கிவந்த பள்ளிவாசல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு மூடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசலும் இதுவரை திறக்கப்படவில்லை. இது தொடர்பில் சுகாதார அமைச்சர், ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ராகம வைத்தியசாலையில் பணிபுரியும் முஸ்லிம் டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு வருகை தரும் முஸ்லிம்கள் தமது சமய கடமைகளுக்கு இந்தப் பள்ளிவாசலைப் பயன்படுத்தி வந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகத்தின்மீது சந்தேகம் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வாறான நடவடிக்கைகளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. தங்களது சமயக் கடமைகளையேனும் நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். பாராளுமன்றத்தில் கணிசமான அளவு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தாலும் சமூகம் சார்ந்த இந்த விவகாரங்களுக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொள்ள முடியாதிருப்பது வருந்தத் தக்கதாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று நீண்ட காலமாக கூறிவருகிறார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்பாவது தீர்வுகள் கிட்டுமா? என முஸ்லிம் சமூகம் காத்திருக்கிறது.
விடிவெள்ளி
VIDEO :