உள்நாடு

225 உறுப்பினர்களும் அழிய வேண்டும் – காவிந்த ஜயவர்தன கடும் விசனம்.

(UTV | கொழும்பு) –

நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாக்க ஆளும் தரப்பினர்கள் செயற்படுவார்களாயின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும் என மக்கள் குறிப்பிடுவது நியாயமானது. பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம். தோற்கடிக்கப்படுவது நம்பிக்கையில்லா பிரேரணை அல்ல, மக்களின் எதிர்பார்ப்பு என்பதை ஆளும் தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின்போது சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வின்மை, தரமற்ற மருந்து கொள்வனவு, விலை மனுகோரலுக்கு அப்பாற்பட்ட வகையில் மருந்து கொள்வனவு, அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக அரசியலமைப்பின் 27ஆவது பிரகாரம் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளோம்.

சுகாதார அமைச்சர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளார். நாட்டு மக்களிள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் தவறியுள்ளார். சுகாதார அமைச்சரின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் அப்பாவி மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருந்து பற்றாக்குறை, விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறல், தரமற்ற மருந்து கொள்வனவு ஆகிய காரணிகளால் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மருத்துவ கட்டமைப்பில் மருந்து தட்டுப்பாட்டினால் முக்கிய சிகிச்சைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகிறது. அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறபோதும் மருத்துவ சிகிச்சைகள் நிறுத்தப்படும்போதும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல நேரிடும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்களால் எவ்வாறு செல்ல முடியும்? அதிக செலவு செய்து சிகிச்சை பெற முடியும்? வசதியில்லாதவர்களின் உயிர் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டினால் வைத்தியர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். மருந்து தட்டுப்பாட்டுக்கு மத்தியில் சிறந்த சேவையை வழங்க முடியாது என்பதால் நாட்டை விட்டு வெளியேறுவதை பிரதான இலக்காக வைத்தியர்கள் கருதுகிறார்கள்.
சுகாதார அமைச்சருக்கும் எமக்கும் இடையில் எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது. சுகாதார துறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சுகாதார அமைச்சர் தோல்வியடைந்துள்ளார். நாட்டு மக்களுக்காகவே அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபடுகிறார்கள். மக்களின் சுகாதாரம் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபடுவது பயனற்றது. அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவில்லை. நாட்டில் சுகாதாரத்துறை நெருக்கடிக்குள்ளாகவில்லை என்று ஆளும் தரப்பினரால் குறிப்பிட முடியுமா?

சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியங்கள் இல்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுகிறார். சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டு அவை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பாவி மக்களே இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாக்க ஆளும் தரப்பினர்கள் செயற்படுவார்களாயின், 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும் என மக்கள் குறிப்பிடுவது நியாயமானது. நாட்டுக்கு கொண்டு வரும் மருந்துப் பொருட்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம். ஆனால் தோற்கடிக்கப்படுவது நம்பிக்கையில்லா பிரேரணை அல்ல, மக்களின் எதிர்பார்ப்பு என்பதை ஆளும் தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

300 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது!

ஃபைஸர் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டிற்கு

இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

editor