நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய உத்திக்க பிரேமரட்ன வெளிநாட்டில் அரசியல் புகலிடம் கோர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடா அல்லது அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ளும் முனைப்புக்களில் அவர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ள உத்திக்க தற்பொழுது கனடாவில் இருப்பதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு உத்திக்க வெற்றியீட்டியிருந்தார்.
அரசியல் புகலிடம்
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி தாம் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் அதே ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி உத்திக்கவின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவங்கள் அனைத்துமே அரசியல் புகலிடம் கோருவதற்கான ஏற்பாடுகளா என தெற்கு ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
குடும்பத்துடன் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உத்திக்க பிரேமரட்ன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக குற்றம் சுமத்தியுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உத்திக்க தரப்பில் எவ்வித பதில்களும் இதுவரையில் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.