உள்நாடு

ஜனாதிபதி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – அமைச்சர் தாரக்க பாலசூரிய

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதியின் வௌிநாட்டு சுற்றுப் பயணங்கள் தொடர்பில் சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார்.இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இருக்க முடியாதெனவும், நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின் வெளிநாட்டு தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வதும், புதிய வௌிநாட்டு உறவுளை ஏற்படுத்தகொள்வதும் அவசியம் எனத் தெரிவித்த அவர், அதற்காக வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் முக்கியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வௌிநாட்டு அமைச்சர் ஆகியோர் சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர். அங்கு வர்த்தகச் சமூகத்தையும் சந்தித்தனர். இலங்கையை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பிலான தீர்க்கமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர். இலங்கைக்கு முதலீட்டாளர்களை அழைத்து வருவது தொடர்பிலான பேச்சுக்களையும் முன்னெடுத்திருந்தனர்.

 

அதேபோல் உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெற்ற அணிசேரா மாநாட்டில் உலகின் செல்வந்த நாடுகளுடன் செயலாற்றும் விதம் குறித்து ஜனாதிபதி தௌிவுபடுத்தினார். 2050 உலக பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.
பின்னர் G77 மற்றும் சீன தென்துருவ மாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி காலநிலை அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய் நிலைமைகளுக்கு எவ்வாறு முகம்கொடுக்கலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடினார். அந்த நிலைமை எம்மை போன்ற நாடுகளை பாதிக்கும் விதம் மற்றும் அந்த நேரத்தில் பொருளாதாரத்தை செயற்படுத்த வேண்டிய முறைமை தொடர்பிலும் கலந்தாலோசித்தார். பசுமை பொருளாதாரத்திற்கான மாற்றம் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வௌிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஆதாரமற்றவையாகும். இவ்வாறான சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதால் எமக்கும் உலக நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வதோடு, புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும். அரசியல் தலைவர்கள் தனியார் துறையினருடன் கலந்துரையாடி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைந்து அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கான இயலுமையும் அதனால் கிடைக்கும். அதேபோல் அணிசேரா கொள்கையை மேலும் உறுதிபடுத்துவதாகவும் அந்த சுற்றுப்பயணம் அமைந்திருந்தது. யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் ஆசியாவின் மீது தாக்கம் செலுத்தாமல் இருப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் பேசப்பட்டதோடு, அரச தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் உலகின் அமைதியை பேண முடியும்.

 

அதேபோல் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் மேலும் கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கைக்கு வருகை தருமாறு மற்றைய நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த இரண்டு மாதங்களில் 8,422 smart phones திருடப்பட்டுள்ளது

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது