உள்நாடு

மீனவர்களுக்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்- பியல் நிசாந்த

(UTV | கொழும்பு) –

இந்நாட்டு மீனவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்புரி செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ‘தீவர சுவ சவிய’ என்ற புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார். இதன் முதற்கட்ட வேலைத்திட்டம் வென்னப்புவ, வெல்லமங்கரய மீன்பிடித் துறைமுகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இவ்வாறு தெரிவித்தார்.இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த,
“கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது சுகவீனமடைவது மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மீனவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளிப்பதில் சவால்கள் இருக்கின்றன. சில சமயங்களில் நோய்வாய்ப்பட்ட மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நடுக்கடலில் வெளிநாடுகளின் உதவியையும் நாங்கள் பெற வேண்டியிருந்தது. மேலும், நோய்வாய்ப்பட்ட சில மீனவர்களை விரைவாக கரைக்கு அழைத்துவர இலங்கை கடற்படையின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதால், அதற்கும் பெரும் தொகைப் பணம் செலவிட வேண்டியுள்ளது.

 

கடலில் சுகவீனமடைந்த மீனவர்கள் உயிரிழப்பது மிகவும் கவலையான நிலையாகும். கப்பலில் மீனவர் ஒருவர் இறந்தால் மற்றும் நோய்வாய்ப்பட்டால், மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கப்பல் அனுமதிக்கப்படாது. மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் கரைக்கு வரவேண்டும். அதனால், மீன்களைப் பிடிக்காமல் கரைக்குத் திரும்புவதால் கடும் பொருளாதார இழப்பையும் சந்திக்க வேண்டியேற்படுகின்றது. இதன் தாக்கம் மீனவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்றுமதி வருமானம் மற்றும் உள்நாட்டு மீன் நுகர்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் ஒரு மீனவர் இறந்தால் அந்த மீனவக் குடும்பத்தின் வருமானம் முற்றிலுமாக நின்று விடுகிறது. குடும்ப உறுப்பினர்களும் ஆதரவற்றவர்களாக மாறுகிறார்கள். இதற்கான நிலையான வேலைத்திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது.
இந்த நிலைமைகள் அனைத்தையும் கருத்திற் கொண்டு, மீனவ சமூகத்தின் ஆரோக்கியத்தையும் நலனையும் மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் மிகப் பாரிய திட்டமாக ‘தீவர சுவ சவிய’ வேலைத்திட்டத்தைக் குறிப்பிடலாம். இதன் முதற்கட்ட நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (26ஆம் திகதி) வென்னப்புவ வெல்லமங்கரய மீன்பிடித் துறைமுகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து மீனவர்களும் முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மீன்பிடித் துறைமுகத்தின் அருகிலும் உள்ள ஒரு அரச மருத்துவமனையை பெயர் குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவச் சான்றிதழ் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். சம்பந்தப்பட்ட மீனவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டும். இந்த வேலைத்திட்டத்தில் முதலில் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களின் மாலுமிகள், பின்னர் அந்தக் கப்பல்களின் பணியாளர்கள் உள்வாங்கப்படுவார்கள்.

அதன்பின்னர் நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களையும் இந்தத் திட்டத்தில் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து மீனவர்களுக்கும் முதலுதவி பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனென்றால், கடலில் மீன்பிடிக்கும்போது ஒரு மீனவர் நோய்வாய்ப்பட்டால், மற்ற மீனவர்கள் அவருக்கு அவசர முதலுதவி அளிக்க வேண்டும். அதற்கு மீனவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளிப்பது அவசியம். பயிற்சியைப் படிப்படியாக நிறைவுசெய்ததன் பின்னர், ஒவ்வொரு கப்பலிலும் குறைந்தது ஒரு நபராவது இந்த முதலுதவி பயிற்சியாளருடன் பணியில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டம் இலங்கை கடற்படையின் மருத்துவப் பிரிவினால் நடத்தப்படுகிறது.

மேலும், சுகாதார அமைச்சின் பரிந்துரையின் பேரில், கடலில் அவசர காலங்களில் தேவைப்படும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய முதலுதவிப் பெட்டியொன்று, ஒவ்வொரு கப்பலிலும் நிறுவப்படும். இந்த முழு செயல்முறையும் முடிவடைந்தால், ஆரோக்கியமான மீனவரை தொழிலுக்கு அனுப்ப முடியும். மேலும், அவசர முதலுதவி வழங்குவதன் மூலம் அவர்களின் உயிர் ஆபத்து குறைக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட மீனவர்களை அழைத்து வரும் செலவையும் குறைக்க முடியும். கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது” என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

13வது திருத்தம் குறித்து கோட்டாபய தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என்கிறார் -சன்ன ஜெயசுமன!

ஜனாதிபதி அநுரவுக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு