(UTV | கொழும்பு) –
அம்பாறை மாவட்ட மீனவர்கள், படகு உரிமையாளர்கள் மற்றும் இயந்திர படகு உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவசரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே. கஹவத்த அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மற்றும் மீனவ படகு உரிமையாளர்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பணிப்பாளர் நாயகத்திற்கு விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ், கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் தொடர்பாடலுக்கான வயர்லஸ் தொழில்நுட்ப மத்திய நிலையம் சாய்ந்தமருதில் கடந்த காலங்களில் இயங்கி வந்த விடயத்தையும் அந்த மத்திய நிலையம் இப்போது இயங்காது மூடப்பட்டுள்ள விடயத்தையும் விளக்கி அந்த நிலையத்தை நவீன தொழில்நுட்ப சாதனங்களை நிறுவி மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அடுத்த மாத (பிப்ரவரி) இறுதி அளவில் மீண்டும் அந்த மத்திய நிலையத்தை இயக்க தேவையான சாதனங்களை நிறுவி மீள திறக்க தான் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் திருகோணமலை, வாழைச்சேனை போன்ற மீன்பிடித் துறைமுகங்களில் படகு உரிமையாளர்கள் வெளியிலிருந்து எரிபொருள் கொண்டு செல்வது தடுக்கப்படுவதாகவும் இதனால் மீனவர்களும், படகு உரிமையாளர்களும் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்ற விடயங்களை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் இதற்கான அனுமதியை படகு உரிமையாளர்கள், மீனவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து கடற்தொழில் துறைமுக கூட்டுத்தாபன பொதுமுகாமையாளரை தொடர்புகொண்டு அனுமதி கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பாளர் நாயகம் பொதுமுகாமையாளரை பணித்ததுடன் உடனடியாக அனுமதி வழங்க தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார். இதனால் அம்பாறை மாவட்ட மீனவர்களின் நீண்ட கால பிரச்சினையை தீர்க்க பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්