(UTV | கொழும்பு) –
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தினார்.
கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதன் ஊடாக நாட்டில் அறிவுள்ள பிரஜைகள் உருவாகுவார்கள் எனவும் அது நாட்டின் வெற்றியில் நேரடியாக தாக்கத்தை செலுத்தும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
நவகத்தேகம கோங்கடவல வித்தியாலயத்திற்கு சகல வசதிகளுடன் கூடிய நூலகத்தை வழங்கும் நிகழ்வில் நேற்று முன்தினம் (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சீன நிதியுதவியின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதியின் அலுவலகத்தின் தலையீட்டின் மூலம் நவகத்தேகம கோங்கடவல வித்தியாலயம் மற்றும் நீர்கொழும்பு தூவ ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிற்கு சகல வசதிகளுடன் கூடிய இரண்டு நூலகங்கள் வழங்கப்பட்டன.
ஒரு நூலகத்திற்காக செலவிடப்பட்டுள்ள தொகை இரண்டு மில்லியன் ரூபாவாகும். இந்த நூலகங்களில் தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களின் கல்விக்குத் தேவையான பல்வேறு புத்தகங்கள் உள்ளன.
பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்கும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவதும், அறிவாற்றலுடன் கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதும் இத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களாகும்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் இலங்கைக்கான சீன துணைத் தூதுவர் என்னிடம் நான்கு மில்லியன் ரூபா பெறுமதியான செயற்திட்டத்திற்கு உதவி வழங்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.இரண்டு பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து இரண்டு நூலகங்களை வழங்க நினைத்தேன்.
இந்தப் பாடசாலைகளுக்கு நூலகங்களை வழங்க நினைத்ததற்கு விசேட காரணம் இருந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தப் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள் இந்த நூலகங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நானும் எனது ஆரம்பக் கல்வியை இப்படி ஒரு சிறிய பாடசாலைதான் கற்றேன். எனவே, இந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை இப்போதே கணிக்க முடியாவிட்டாலும், அவர்களின் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.
எனக்குத் தெரிந்து இன்று இங்கு வந்திருக்கும் சீன துணைத் தூதுவரின் தந்தை ஒரு விவசாயி. சீன துணைத் தூதுவர் 8ஆம் வகுப்பு படிக்கும் போது அவரின் தந்தை விவசாயம் செய்யு மாறு கூறியிருக்கிறார்.
சுமார் ஒரு மணி நேரம் பயிர்ச்செய்கையில் ஈடுபடும்போது அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டது. முதுகு வலியை தந்தையிடம் சொன்னபோது, “நன்றாகப் படிக்கவில்லை என்றால் இந்த வேலையைத்தான் செய்ய வேண்டி வரும்” என்று தந்தை கூறியிருக்கின்றார்.
அந்தப் பாடத்தை மனதில் கொண்டு இன்று துணைத் தூதுவராக வெற்றிகரமாக முன்னேறியுள்ளார். சர்வதேச நாடுகளில் தொழில் புரியும் நிலையை எட்டியுள்ளார். சர்வதேச நாடுகளில் தொழில் புரியும் நிலையை எட்டியுள்ளார். எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி என்பதை இந்தப் பிள்ளைகள் மனதில் கொள்ள வேண்டும். கல்வியின்றி பிள்ளைகளுக்கோ நாட்டுக்கோ எதிர்காலம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ,பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, இலங்கைக்கான சீன துணைத் தூதுவர் யன்ங்வாய் தூ (YANWAI ZHU) மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්