(UTV | கொழும்பு) –
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள கடற்படைக் கப்பலை அனுப்பும் இலங்கையின் முடிவுக்கு மேற்கு ஆசிய நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது யேமனில் இருந்து செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் தமது பாதுகாப்பு கப்பல்கள நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், செங்கடலின் பாதுகாப்புக்காக இலங்கையின் கடற்படை கப்பலை அனுப்பும் தீர்மானத்தை ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பில் கவலையடைந்துள்ள மேற்கு ஆசிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள், நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகள் இஸ்ரேலுடன் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு இணங்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. ஏனைய நாடுகள் அத்தகைய ஒப்பந்தங்களை செய்யவில்லை என மேற்கு ஆசிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
”எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுடனும் அணிசேரா இராணுவ நிலைப்பாட்டை இலங்கை கடைப்பிடிக்கிறது. ஆனால் கடற்படைக் கப்பலை அனுப்பியதன் நோக்கம், இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் சுதந்திரமான கடல்போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கும்.” என ஜனாதிபதி தூதுவர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.”மேற்குலக நாடுகளுடன் காணப்படும் தொடர்புகளுக்கு மேலதிகமாக ஆசியா, மேற்கு ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வலயங்களுடனான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள இலங்கை எதிர்பார்த்துள்ளது.” எனவும் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் விரிவான வெளியுறவுக் கொள்கை தொடர்பிலும் வலியுறுத்தினார்.
இதன்போது பாலஸ்தீன பிரச்சினைக்கு இலங்கை அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த தூதுவர்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி இலங்கை தொடர்ந்து முடிவுகளை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். மேலும், இஸ்ரேலில் உள்ள இலங்கை பணியாளர்களை இஸ்ரேலால் ‘ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில்’ மீள்குடியேற்றும் பணிகளில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் தூதுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්