(UTV | கொழும்பு) –
வடமாகாணத்திற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ். சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
வடக்கின் சிவில் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட்டாலும் சாதிப் பிரச்சினையால் மக்கள் அவதிப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தை தவிர்த்து கொழும்பில் வாழும் அரசியல்வாதிகள் இப்பிரச்சினை குறித்து குரல் எழுப்பாதது வேதனைக்குரியது எனவும் அருண் சித்தார்த் சுட்டிக்காட்டினார்.
வடமாகாணத்தில் பல சாதிப் பாடசாலைகள் இருப்பதாகவும் அவற்றுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடையாது என்றும் சுட்டிக்காட்டிய அருண் சித்தார்த்,அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.
அவ்வாறான 100 பாடசாலைகளின் பெயர்களை முன்வைக்குமாறும் அந்த 100 பாடசாலைகள் உடனடியாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும் யாழ்.சிவில் சமூக நிலையத்திற்கு ஜனாதிபதி உறுதியளித்தார்.
சாதிப் பிரச்சினைகளுக்காக மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத பிரதேச செயலகங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் என்று கூறி சங்கங்களை அமைத்துள்ள காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருப்பதாக யாழ்.சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த், இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.
காணாமல் போனோர் சங்கங்களைச் சேர்ந்த எவருடனும் விவாதத்திற்கு தான் தயாராக இருப்பதாகவும், அவர்கள் காணாமல் போனவர்கள் எனக் கூறி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் சித்தார்த் மேலும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மக்கள் எதிர்நோக்கும் ஆனால் கவனத்தில் கொள்ளப்படாத பல பிரச்சினைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் யாழ் சிவில் சமூக நிலையத்தினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் யாழ்.சிவில் சமூக நிலையத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්