வகைப்படுத்தப்படாத

வடக்கிற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!

(UTV | கொழும்பு) –

வட மாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு செயலூக்கமான நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், மீனவ சமூகம் மற்றும் விவசாயிகள் உள்ளடங்கிய சுமார் 300 பேர் கொண்ட குழு இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், தமது தொழில்துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புதிய முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில பிரச்சினைகளுக்கு அதே நேரத்தில் தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.

வடமாகாணத்திற்கு கைத்தொழில் வலயமொன்றை வழங்குமாறு கைத்தொழில்துறையினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்குத் தேவையான காணியை இனங்காணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அத்துடன், மாகாண வர்த்தக ஊக்குவிப்பு நிலையமொன்றை வடமாகாணத்திற்கு விரைவாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வடமாகாணம், தேசிய பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிப்பதற்கு தொழில்துறைகளை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும்  நேற்று  யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதற்காக தற்போதுள்ள மனித வளப் பற்றாக்குறையைத் தீர்க்க தொலைக் கல்வி முறைகளைப் பயன்படுத்துவதற்கான இயலுமையையும், அதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற புலம்பெயர் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான திறனையும் ஜனாதிபதி விளக்கினார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் விரிவுரையாளர் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு மாணவர்களையும் கவரக்கூடிய வகையில் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காம்சாத்கா தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவு

Sri Lanka, West Indies fined for slow over rate

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக விளாடிமிர் புட்டின் தெரிவிப்பு