உள்நாடு

ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் – கஞ்சன விஜேசேகர

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் VAT எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

“உத்தேச புதிய மின்சக்தி சட்ட மூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது பல்வேறு ஆலோசனைகள் எமக்கு கிடைத்து வருகின்றன. உத்தேச புதிய மின்சக்தி சட்ட மூலம் தொடர்பில் ஆர்வமுள்ள தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மின்சார நுகர்வோர் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரும் தமது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம்.

அந்தக் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்று முதல் ஜனவரி 03 ஆம் திகதி வரை எழுத்து மூலம் எமக்கு சமர்ப்பிக்கலாம். உத்தேச புதிய சட்ட மூலம் மின்சக்தித் துறையின் மறுசீரமைப்புகளுக்கும் எதிர்காலத்தை வலுப்படுத்தக்கூடிய சட்ட மூலமாக மாற்ற முடியும். அந்த வகையில் அனைத்து தரப்பினரும் வழங்கும் ஆலோசனைகளைக் கவனத்திற்கொண்டு தயாரிக்கப்படும் சட்டமூலத்தை ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கிறோம்.

மேலும், மின் கட்டணத்தை ஜனவரியில் திருத்தம் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிகபட்ச திறனில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்திக்கு ஏற்படும் அதிக செலவைக் கருத்தில் கொண்டே ஒக்டோபர் மாதத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. எவ்வாறாயினும், தற்போது காலநிலை மாறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வருவதாலும், மழை இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாலும், மின் கட்டணத்தைத் திருத்த முடியும் என இலங்கை மின்சார சபை எமக்கு அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் உள்ள CEB கையிருப்யைக் கருத்தில் கொண்டு, ஜனவரியில் நடைபெறவுள்ள அடுத்த கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என நாம் நம்புகிறோம்.

மேலும், ஜனவரி மாத மின் கட்டண திருத்தத்தில் ஒருபோதும் VAT தாக்கத்தை செலுத்தாது. மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நெப்தா மற்றும் நிலக்கரிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மின்சக்தித் துறைக்கு VAT பொருந்தாது என்பதையும் கூற வேண்டும்.n VAT வரி எரிபொருள் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தப் பாதிப்பைத் தணிக்க நாங்கள் தற்போது ஏனைய மாற்று வழிகள் குறித்து கலந்தாலோசித்து வருகிறோம். அதன் பிரகாரம் ஜனவரியில் எரிபொருள் விலையை திருத்தவும் தயாராகி வருகிறோம். அதன்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட இடமளிக்க மாட்டோம். தற்போது தேவையான எரிபொருள் கையிருப்பு எம்மிடம் உள்ளது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் மற்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் Furnace oil அளவு குறைந்ததால், Furnace oil மற்றும் நெப்தா ஆகிய இரண்டு வகையான எரிபொருள் வகைகள் அதிகளவில் கையிருப்பில் உள்ளன. சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட்ட உற்பத்திகளினால் இலங்கை களஞ்சிய முனையத்தின் தாங்கிக் கட்டமைப்பு அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள அதிகப்படியான Furnace oil மற்றும் நெப்தாவை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்தது.

மேலும், சிலர் இந்திய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நாட்டின் சூரிய மின் நிலையங்களுடன் ஒப்பிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனால், இந்திய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை எமது நாட்டு சூரிய மின் நிலையங்களுடன் ஒப்பிட முடியாது. இந்தியா சொந்தமாக சோலார் பேனல்களை உற்பத்தி செய்யும் நாடு. நமது நாடு சோலார் பேனல்களை உற்பத்தி செய்வதில்லை. நாம் அனைத்தையும் இறக்குமதி செய்ய வேண்டும். உற்பத்திச் செலவில் நமது இரு நாடுகளுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. மேலும் காற்றாலை மின் உற்பத்தியில் டிரான்ஸ்மிஷன் லைன் கட்டமைப்புகளிலும் இந்த நிலைமை காணப்படுகின்றது.” என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்

ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பின் 2வது வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

ஜனக பண்டாரவுக்கு எதிரான வழக்கு இரத்து