(UTV | கொழும்பு) –
உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அண்மையில் நேரில் சந்தித்ததையிட்டு தான் கடும் அதிருப்தி அடைவதாக கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சரான கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பாரிய அளவானதும், கட்டமைக்கப்பட்டதுமான மனித உரிமை மீறல்களுக்காக மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கனேடிய அரசு தடைகளை விதித்தது.
தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் குரல் எழுப்பப்பட்ட பின்னரே இது நடைபெற்றது.
தப்பிப்பிழைத்தவர்கள், குடிசார் சமூக அமைப்புகள், இலங்கையில் உள்ள தமிழர்கள் ஆகியோரை கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி முடிவெடுப்பதில் ஏற்பட்ட பாரதூரமான தவறாகும். இந்த நடவடிக்கைகள், இந்த அமைப்புகள் மீதும், புலம்பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வதாகவும், மிக முக்கியமாக தாய்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படுவதாகவும் இந்த அமைப்புகள் கூறுவதன் மீதும் இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளன.
இலங்கை தீவில் உள்ள தமிழர்கள், பொறுப்புக்கூறலுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கும் பலமானதும், சக்திவாய்ந்ததுமான குரலைக் கொண்டுள்ளார்கள். அவர்களின் குரலாக இந்த அமைப்புகளின் நிலைப்பாடுகள் அமையவில்லை. இந்த அமைப்புகளின் தலைமைகளை ஆழ்ந்து சிந்திக்குமாறும், அவற்றின் செயல்களுக்கு பொறுப்புக்கூறுமாறும் நான் கோருகின்றேன்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්