(UTV | கொழும்பு) –
பொரலந்த தொடக்கம் ஹோர்டன்தென்ன வரையான ஒஹிய பகுதியில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார். ஒஹிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத நிர்மாணங்களால் பாரிய சுற்றாடல் அழிவுகள் ஏற்பட்டுள்ளதை தாம் அவதானித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிலைமையை உடனடியாகத் தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், மாவட்டத்தின் கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது உரிய அளவுகோல்களுக்கு அமைய செயற்படுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகள் குறித்த முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இருந்து காணிகளை சட்டப்பூர்வமாக விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.இது தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி பணிகளை விரைந்து முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை விடுத்தார்.
பதுளை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலில், மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், வீதிகள், போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் ஒரு சில பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
அத்துடன், 2024ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அடுத்த வருடம் முதல் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் எனவும், மலையக அபிவிருத்தித் திட்டம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் வெளிநாட்டு உதவியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் இருந்து பெறப்பட்ட நிதி என்ற அனைத்து நிதியையும் இணைத்து மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் குறித்த பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இன்று சனிக்கிழமை தினம் என்றாலும் கூட இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் முதலில், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 03 வருடங்களாக எமது நாட்டில் எந்த அபிவிருத்தியும் இடம்பெறவில்லை.
நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் வெற்றியினால், தடைப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முறையாக மீள ஆரம்பிக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.
மேலும், எமது கடன் வழங்குநர்கள், பெரிஸ் அமைப்பு மற்றும் இந்தியா, அத்துடன் சீனா ஆகியவை எங்கள் முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்டன.
அதன் பிரகாரம் கலந்துரையாடல்களை தொடர சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த அங்கீகாரம் காரணமாகவே நமக்கு மீண்டும் வெளிநாட்டு உதவி கிடைக்கிறது. அதன்படி, எதிர்வரும் ஆண்டின் முதல் சில மாதங்களில் உடனடியாக தொடங்கக்கூடிய திட்டங்கள் குறித்து தெரிவிக்க எதிர்பார்க்கிறோம்.
மேலும், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.வருமான வரி வசூலிக்கப்பட்டே இந்த நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு அபிவிருத்தி அவசியம்.எனவே இந்த திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். மேலும் இந்த நடவடிக்கைகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த திட்டங்கள் அனைத்தும் ஓராண்டில் தொடங்க முடியாவிட்டாலும், படிப்படியாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் கண்டறியப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு முதல் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தை மாவட்டங்களுக்கு வழங்குவோம். மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடுகள் வழங்கப்படும் மேலும், மலையக வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பல புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் உள்ளன.அத்தகைய கிராமங்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் தலா 10 மில்லியன் வழங்கப்படும். அதனை படிப்படியாக அதிகரிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் மாகாண சபைகளுக்கு நிதி வழங்கியுள்ளோம். அந்தப் நிதியையும் இத்துடன் இணைக்க வேண்டும். அப்போது மாவட்டத்திற்கு கிடைக்கும் நிதியின் அளவு அதிகரிக்கும். மேலும், அமைச்சு மட்டத்தில் மூலதனச் செலவீனமாக ஒவ்வொரு திட்டத்திற்கும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த தொகையையும் இதில் உள்ளடக்க எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு உதவியின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கிடைக்கவேண்டிய தொகையும் இதில் சேர்க்கப்படும்.
இதன்படி மலையக வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, மாகாண சபைகளுக்கு கிடைக்கும் நிதி, வெளிநாட்டு உதவியின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்களின் மூலம் பெறப்படும் நிதி என அனைத்தையும் ஒன்றுசேர்த்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளது. 2024 ஜூலை மாதத்திற்குள் இந்தப் பணியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் கலந்தாலோசித்து மாகாண மட்டத்தில் பணிகளை நடைமுறைப்படுத்த குழுவொன்றை நியமிக்கவும் எதிர்பார்த்துள்ளேன். இக்குழுவில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர்கள் மற்றும் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்குவர்.
மாகாண சபைத் திட்டங்கள் ஆளுநரின் ஊடாகவும் மத்திய அரசாங்கத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாகவும் ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதன்படி, அந்தந்த பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை இந்தக் குழுக்களுக்கு வழங்குவதன் ஊடாக அந்தப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதற்கு தனியார் துறையினரும் பங்களிப்பு செய்கின்றனர்.அதன்போது, விவசாய அமைச்சு மற்றும் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றவும் ஒருவரை நியமிக்க எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கமத்தொழில் சேவை மையங்களை விவசாய நவீனமயமாக்கல் மையங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
மேலும், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அனைவருக்கும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தை பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பாரிய பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
இங்கு முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளும் ஜனாதிபதி வழங்கிய பதில்களும் பின்வருமாறு:
கேள்வி:
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது தொடர்பில் இதற்கு முன்னர் பல தடவைகள் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்களே, இது தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?
பதில்:
இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதில் சிக்கல்கள் உள்ளன. அடுத்த ஆண்டு சாத்தியமில்லை என்றாலும், அடுத்த சில ஆண்டுகளில் இதை அதிகரிக்கலாம் என நாம் நம்புகிறேன். இருப்பினும், எமக்கு ஒரு புதிய வேலைத்திட்டம் தேவை. இன்னொரு விடயத்தையும் இங்கே கூற வேண்டும்.
இந்த வீட்டுத் திட்டத்தை யார் அங்கீகரிப்பது? இது தொடருமானால் நகர சபை மற்றும் இது தொடர்பில் செயற்படும் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும்.
இந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தால், நகர சபையின் பணத்தில் இருந்து செலுத்த வேண்டியேற்படும். கட்டுமானம் தொடர்பாக திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுமானால், அது தொடர்பான அளவுகோல்களை எழுத்துப்பூர்வமாக அளித்து அதன்படி செயல்பட வேண்டும். அந்தச் செயற்பாடுகளை அவர்கள் விருப்பத்திற்குச் செய்ய அனுமதிக்கக் கூடாது.
நான் ஹோர்டன் சமவெளிக்கு விஜயம் செய்த போது, ஒஹியவின் மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘கெஸ்ட் ஹவுஸ்’ பலவற்றைக் கண்டேன். அவை ஆற்றின் அருகே கட்டப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் ஓடையில் இருந்து நீர் எடுத்தால் கீழே உள்ளவர்களுக்கு நீர் கிடைக்காது.எனவே, கலந்துரையாடி தீர்மானத்தை அறிவிக்கும் வரை ஒஹிய பகுதியில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தொடர்ந்தால், இப்பகுதிகளுக்கு உயர்தர சுற்றுலா பயணிகள் வரமாட்டார்கள். மேலும் இதனால் ஏற்படும் மற்றொரு சேதம் என்னவென்றால், ஒஹியவில் இருந்து நீரை மேலே கொண்டு செல்வதால் நகரத்திற்கும் கீழே உள்ள பகுதிகளுக்கும் நீர் கிடைக்காது போகும்.எனவே, பொரலந்தைக்கு மேற்பகுதியில் நிர்மாணிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். பிளாக்பூல் பகுதியிலும், இதுபோன்ற முறைசாரா கட்டுமானத்தால், அப்பகுதி அழிந்து வருகிறது.
கேள்வி:
உமா ஓயா திட்டத்தினால் பதுளை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஜனாதிபதி அவர்களே, இது தொடர்பில் சில நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பதில்:
உமா ஓயா திட்டத்தினால் பதுளை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. உமா ஓயா திட்டம் ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் கொண்டுவரப்பட்டது.
பிறகு பல்வேறு பிரச்சினைகளால் அதை நிராகரித்தோம். உமா ஓயாவை மஹாவெலி திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அப்போது, பிங் கெயவினால், ஏற்படும் பல பிரச்சினைகள் அப்போது முன்வைக்கப்பட்டன. இப்பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு காண்பதற்கு, முன்னர் குறிப்பிட்டது போன்று பதுளை மாவட்டம் குறித்து முழுமையாகஆராய வேண்டும்.
கேள்வி:
உமா ஓயாவினால் சேதமடைந்துள்ள திக்அராவ காணியின் உள்ளக வீதிகள் மற்றும் வடிகால் அமைப்புகளை உரிய முறையில் நிர்மானிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பதில்:
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக I Road திட்டத்தை நிறுத்த வேண்டியிருந்தது. இப்போது அந்த திட்டத்தை மீண்டும் தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதன்படி, இதுபோன்ற திட்டங்கள் குறித்து ஆலோசித்து, அதற்கான பணிகளைச் செய்ய எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, அரவிந்த குமார், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினரும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச உட்பட மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්