உள்நாடு

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அனுமதிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வரவேற்பு!

(UTV | கொழும்பு) –

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான இரண்டாம் கட்ட கடன்நிதி விடுவிக்கப்பட்டிருப்பது குறித்து வரவேற்பு வெளியிட்டிருக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனம் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்), நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் டொலர் கடன்நிதியை வழங்குவதற்கு நாணய நிதியப் பணிப்பாளர் சபை கடந்த செவ்வாய்கிழமை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து வரவேற்பு தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இலங்கை வர்த்தக சம்மேளனம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ள அனுமதி மிகமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், இதனூடாக இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெறும். இது மிகமுக்கிய நிபந்தனைகள் மற்றும் அடைவுகளைப் பூர்த்திசெய்வதில் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாட்டை நன்கு வெளிப்படுத்துகின்றது.

ஆட்சியியல் ஆய்வு அறிக்கையை வெளியிடல் மற்றும் சர்வதேச கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுதல் போன்றவை நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் உள்ளடங்குகின்றன. இவை வருமானத்தை அடிப்படையாகக்கொண்ட நிதியியல் கொள்கைவகுப்பு, பரந்துபட்ட நிதி மேற்பார்வை, கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல், கையிருப்பை கட்டியெழுப்பல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் நிதியியல் உறுதிப்பாட்டைப் பேணல் ஆகியவற்றை அடைவதில் இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றன. அதுமாத்திரமன்றி ஆட்சியியல் மேம்பாடு மற்றும் சமூகத்தில் நலிவடைந்த நிலையிலுள்ள தரப்பினரைப் பாதுகாத்தல் என்பவற்றை முன்னிறுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவையாகும்.

அதேவேளை ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். குறிப்பாக அண்மையகாலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரி அறவீடுகள் பணவீக்கத்தில் தாக்கம் செலுத்தியிருப்பதுடன், பொதுமக்களின் கொள்வனவு ஆற்றலை வெகுவாகப் பாதித்திருக்கின்றது. எனவே இவற்றை நேர்மறையான பாதையில் கொண்டுசெல்வதற்கு பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வது அவசியமாகும்.

மேலும் சுற்றுலாத்துறை, துறைமுகங்கள், புதுப்பிக்கத்தக்க சக்திவலு மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளிலும், குறிப்பாக விவசாயத்துறையில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் விசேட கவனம் செலுத்திவருகின்றோம். அந்தவகையில் நிதியியல் செயற்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் ஆட்சியியல் நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவான டிஜிட்டல் தொழில்நுட்பப் பிரயோகம் இன்றியமையாததாகும். இவற்றை நடைமுறைப்படுத்துவதை இலக்காகக்கொண்டு அரசாங்கத்துடனும், சர்வதேச நாணய நிதியம் போன்ற இதர கட்டமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயலாற்றத் தயாராக இருக்கின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்தடை குறித்து மின்சார சபையின் அறிவிப்பு

ஹரீன் மற்றும் மனுஷ மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு!

புதிய அரசுக்கு ஆதரவு வழங்குமாறு ‘வியத்மக ‘ அமைப்பிடம் கோரிக்கை