(UTV | கொழும்பு) –
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம் துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (TIKA) நிறுவன நிதி உதவியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையானது அதிநவீன 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தை நிறுவுவதற்குத் தேவையான அதிநவீன 3D பிரிண்டர், ரோபோடிக் கை உட்பட பல ரோபோடிக் உபகரணங்களை துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (Turkish Cooperation and Coordination Agency – TIKA) நிறுவனத்திடமிருந்து வைபவரீதியாக பெற்றுக்கொண்டது.
இந்தக் கையளிப்பு நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், தொழில்நுட்ப பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். மஜீத், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஆர். கே. றிபாய் காரியப்பர், சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் துறை தலைவருமான கே.எம். றிப்தி உட்பட பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் TIKA இன் பிரதிநிதிகளான செவ்கி மெர்ட் பாரிஸ், ஜெய்னெப் பைராக் மற்றும் ஓயா துதுன்சு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பௌதீக பரிமாற்றத்தைக் குறித்தது மட்டுமன்றி, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதை அடையாளப்படுத்துகிறது என்று உபவேந்தர் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் இந்த நன்கொடையானது பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைகளில் மாற்றியமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தினார். அத்தோடு பல்கலைக்கழக வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க கதிரவ அமைப்பினை (Solar System) நிறுவுவதில் TIKA வின் ஆதரவை கோரினார், அக்கோரிக்கைக்கு பதிலளித்த TIKA நிர்வாகிகள், தம்மாலான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் என்று உறுதி பகர்ந்தனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் TIKA நிறுவனத்திற்கும் இடையேயான இந்த கூட்டு முயற்சி, இலங்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இந்த உபகரணங்கள் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு புதுமையான தீர்வுகளை உருவாக்கவும், சவால்களைத் தீர்க்கவும் உதவும். இந்த கூட்டு முயற்சியின் வெற்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தவும், இலங்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கவும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை என்று இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්