உள்நாடு

ஜனாதிபதியின் கொள்கையினால் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்தது – அலி சப்ரி.

(UTV | கொழும்பு) –

 

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்ரி தெரிவித்தார்.

ஒரு தரப்பிடம் சரணடையாமல் அனைத்து நாடுகளுக்கும் நட்புறவின் கரங்களை நீட்டியதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை பெற முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,“வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என்ற வகையில், கடந்த ஆண்டு முதல் நாம் முக்கியப் பங்காற்ற வேண்டியிருந்தது. கடந்த காலங்களில் எற்பட்ட பல்வேறு விடயங்களால் வெளிநாடுகளுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளது. அதேபோன்று, எமது நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு அனைத்து நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்தி வருகிறோம்.

ஒரு தரப்பைச் சார்ந்திருக்காமல் அனைத்து தரப்பினருடனும் இணக்கமாக செயல்படுவதே எமது நோக்கம். அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும். யாரையும் பகைத்துக்கொள்ளாமல் எந்த தரப்புக்கும் சாதகமாக இல்லாமல் அவதானத்துடன் இருக்க வேண்டும். இந்த நட்புறவின் மூலம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கடன் மறுசீரமைப்புக்கு பாரிஸ் சமூகத்தில் சில வழிமுறைகள் உள்ளன.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு மேல் உள்ள நாடு என்ற வகையில், கடனை மறுசீரமைப்பதற்கான பொறிமுறை நம்மிடம் இல்லை. எனவே நாங்கள் எமக்கே உரிய பொறிமுறையை தயார் செய்ய வேண்டியிருந்தது. இதன்போது, பாரிஸ் கிளப்பிற்கு வெளியே இந்தியா, சீனா மற்றும் ஜப்பானின் ஆதரவின் மூலம் பாரிஸ் கிளப்பிலிருந்து சில உதவிகளைப் பெற முடிந்தது.

கடந்த மாத நிலவரப்படி, நமது நாட்டின் கடனை மறுசீரமைக்க அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதன் காரணமாக, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் கடன் மறுசீரமைப்பை விரைவுபடுத்தும் திறன் எம்மிடம் உள்ளது. அத்துடன், டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இரண்டாவது தவணையைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக இலங்கை, சரியான பாதையில் செல்வதையே காட்டுகிறது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஜனாதிபதியின் சரியான தீர்மானங்கள் காரணமாக இந்தியா, சீனா, மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குநர்களின் ஒப்புதலைப் பெற முடிந்துள்ளது. கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு, நம் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிடும் என்பதை உலகிற்கு அறிவிக்க முடியும். எமது மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் இன்று நாட்டை அந்த நிலையிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் படிப்படியாக செயல்பட்டு வருகிறது.

கடன் மறுசீரமைப்பு மூலம் நாம் செலுத்த வேண்டிய கடனின் அளவைக் குறைக்க முடிகிறது. மேலும், கடனைச் செலுத்தும் அளவைக் குறைத்து, வட்டியைக் குறைப்பதன் மூலம், நாம் செலுத்த வேண்டிய கடனில் இருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணத்தை எமது நாடு பெறும் திறன் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய முதலீட்டாளர்கள் தேவை. அதற்கான வேலைத்திட்டத்தை நாம் இப்போது தொடங்கியுள்ளோம். அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில், தற்போதுள்ள பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மேலும் மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு உரிய திட்டமிடல் அவசியம்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

1,373 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது.