(UTV | கொழும்பு) –
சாய்ந்தமருது மதரஸா மாணவன் கொலை இந்த செய்தி பல உணர்வலைகளைத் தோற்றுவித்திருக்கிறது. இது வேலியே பயிரை மேயும் நிலையாகும். என பிரபலர் இஸ்லாமிய அறிஞர் எஸ்.எச்.எம். பழீல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
”ஏற்கனவே மத்ரஸாக்கள் பற்றிய பிழையான கண்ணோட்டங்களும் சந்தேகங்களும் பெரும்பான்மையினருக்கு மத்தியில் இருந்து வரும் இந்த சூழ்நிலையில் இத்தகைய சம்பவங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று அமையும். இனரீதியாக சிந்திப்பவர்களுக்கு இது வாய்க்கு அவல் கிடைத்தது போன்று அமைய வாய்ப்பு இருக்கிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.குர்ஆன் மற்றும் கிதாபு மதரஸாக்கள், அஹதியாக்கள் என்பவற்றில் போதிக்கும் ஆசான்கள் முறையாக பயிற்றுவிக்கப்படுவதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.
இதன் அர்த்தம் அரச பாடசாலைகளிலோ பல்கலைக்கழகங்களிலோ கற்பிப்பவர்கள் முறையாக நடந்து கொள்கிறார்கள் என்பதும் அல்ல.
ஆனால் மார்க்கத்தை போதிக்கின்ற கலாநிலையங்களில் ஆசிரியர் மாணவர் உறவு என்பது உயர்ந்ததாக இஸ்லாமிய அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது தான் பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.போதனைக்காக தெரிவு செய்யப்படுபவர்களது கல்வி நிலை, பண்பாடு, பயிற்சி, மனப்பக்குவம், உள நிலை என்பன உயர்ந்த பட்சமாக கவனிக்கப்பட்ட பின்னரே அவர்கள் கற்பித்தல் பணிக்காக உள்வாங்கப்பட வேண்டும்.
மாணவர்களை மிகக் கொடூரமாக தாக்கும் வீடியோக்கள் இதற்கு முன்னரும் சமூக வலைத்தளங்களில் உலா வந்திருப்பதும் இங்கு நினைவூட்டத்தக்கதாகும். அவற்றைப் பார்த்த சிலர் இது எமது நாட்டில் நடப்பவை அல்ல. வெளிநாடுகளில் நடப்பவை என்று கூறினார்கள். ஆனால் தற்போது இது போன்ற நிகழ்வுகள் இங்கும் நடப்பது தான் கவலைக்குரியதாகும்.
இது போன்ற நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் நடக்காமல்
இருக்க நீண்ட கால திட்டங்கள் அவசியம். அப்படி இல்லாத போது முஸ்லிம் சமூகத்திற்கு உத்தியோபூர்வமாக கிடைத்திருக்கின்ற பல சந்தர்ப்பங்கள் மூடப்படலாம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
அ.இ.ஜ.உ., மு.ப.அ.தி, வக்பு சபை, உலமாக்கள், மத்ரஸா நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் போன்றோருக்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன.” என தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්