(UTV | கொழும்பு) – நேர்மையான நீதியரசர்களால்தான் நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று முன்தினம் (04) பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்
இன்று (06) நாடாளுமன்றில் தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
“நீதியமைச்சு தொடர்பான விவாத தினத்தன்று (04) நான் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில், கௌரவ நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ எனக்கு எதிராக நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்ட நீதியரசருக்கு நான் சாபமிடவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அவர் என் உரையை முழுமையாகக் கேட்டுவிட்டு, இறுதியாக, அவரது மனச்சாட்சிப்படி எனக்கு பதிலளித்தார். அதன்பிற்பாடு இரண்டு நாட்கள் கழித்து அவர் சபையில் தெரிவித்த கருத்துக்கள், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் பேசப்பட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது.
மேலும், இந்த உயர்சபையில் எந்தவொரு நீதியரசரின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இந்த நாட்டில் ஏதேனும் அநீதி நடந்தால், அதுபற்றி தீர்ப்பு வழங்க இறைவனுக்கு அடுத்தபடியாக நீதிபதிகளே இருக்கிறார்கள் என்று நான் பொதுவாகச் சொன்னேன். ஒரு நீதிபதி ஏதாவது நிர்ப்பந்தத்தின் கீழ் தீர்ப்பு வழங்குகிறார் என்றால், அவர் சரியா தவறா என்று விமர்சிக்க எமக்கு உரிமை இல்லை. அவர்கள் தங்கள் மனசாட்சிக்கும் இறைவனுக்கும் மட்டுமே பயப்பட வேண்டும். அவர்கள் தவறு செய்தால் அதற்கான தண்டனையை இறைவனிடமே பெறுவார்கள். (Click Here to VIDEO)
இந்த நாட்டில் நீதியாரசர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதியின் இனமோ மதமோ தடையாக இருக்க முடியாது என்பதையே எனது உரையில் நான் குறிப்பிட்டிருந்தேன்.
நிறைவேற்றதிகாரம் கொண்ட நான்கு ஜனாதிபதிகளுக்கு எதிராக துணிச்சலான தீர்ப்புக்களை வழங்கி, பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற நீதியரசர்கள் இருக்கும் நாடு இது. இந்த நாட்டில் நேர்மையான நீதியரசர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை நான் மதிக்கின்றேன்.
ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் அடிப்படையாகக் கொண்ட எந்த நாட்டிலும் நீதியரசர்களின் சுதந்திரம் அவசியமாகின்றது. நீதித்துறையில் சுதந்திரம் இல்லாத நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் சுதந்திரம் ஆகியன இல்லாமல் போய்விடும். அவ்வாறு இல்லாமல் போவது மிகவும் ஆபத்தான நிலையையே தோற்றுவிக்கும். நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காது. தற்பொழுது திவாலாகியுள்ள எமது நாட்டிற்கு அப்படி ஏதாவது நடந்தால் மீளவே முடியாமல் போய்விடும்.
எனது கடந்த பாராளுமன்ற உரையில் நான் தெரிவித்த ஒரு கருத்துக்கு, நேற்றுமுன்தினம் நீதி அமைச்சர் நீதியாரசர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். எனது வழக்கில் ஆஜராகாமல் நான்கு நீதியரசர்கள் விலகினர் என்றும் அந்த நீதியரசர்களில் ஒருவரான கெளரவ நீதியரசர் யசந்த கோதாகொட விலகியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினால் அது எனக்கு களங்கம் விளைவிப்பதாக அமையும் எனவும் நீதி அமைச்சர் கூறியிருந்தார். கெளரவ நீதியரசர் யசந்த கோதாகொட எனது பக்கத்து வீட்டுக்காரர் என்பதைத் தவிர வேறு எந்தவொரு காரணமும் இருக்க முடியாது. எனது மார்க்கத்தின்படி அண்டை வீட்டாருடன் பழகினேன் என்பதைத் தவிர, நீங்கள் குறிப்பிட்டது போல் எந்தக் காரணமும் இல்லை.
மேலும், எனது வழக்கில் ஆஜராகாமல் மற்றைய நீதியரசர் விலகியதற்கு காரணம், என் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணியும் அவரது கனிஷ்ட சட்டத்தரணி ஒருவரும் வழக்கு விசாரணைக்கு முந்தைய தினம், குறித்த நீதியரசருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதே எனவும் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். நேற்று இந்த சபையில் அவர் அதைக் கூறும் வரையில் அது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் போது, நான் சி.ஐ.டி காவலில், 04வது மாடியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். ஆனால், அந்த கனிஷ்ட சட்டத்தரணியும் சிரேஷ்ட சட்டத்தரணியும் உண்மையிலேயே அப்படி தொலைபேசியில் தொடர்புகொண்டார்களா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. அந்த சந்தேகத்தைப் போக்க வேண்டும். எனினும், இந்த விவகாரம் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனென்றால், இதைப் பற்றி பேசினால், ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் பாதிப்பு ஏற்படும்.
இங்கு நான் இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். நீதி அமைச்சரின் உரையில் குறித்த நீதியரசரின் கண்ணியத்தைக் காக்க அவர் முயற்சித்தார். உண்மையில், அவருடைய உரையைக் கேட்டபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், இந்த நீதியரசர்களும் சடத்தரணிகளும் ஒரு வழக்கைப் பற்றி தொலைபேசியில் கலந்துரையாட முடியுமா? சட்டத்தரணிகள் நீதியரசர்களை தொலைபேசியில் அழைத்து, “இந்த வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும்” அல்லது “இந்த வழக்கை இன்று விசாரிக்க வேண்டாம்” என்று சொல்ல முடியும் என்பதை நான் இதுவரையில் அறிந்திருக்கவில்லை. நீங்கள் அந்த நீதியரசரின் பெயரைப் பாதுகாக்க முயற்சித்தாலும், உண்மையில் நீங்கள் அவருடைய பெயரைப் பாதுகாக்கவில்லை. அப்படிப்பட்ட விபரங்களை வெளியிட்டால் நீதிமன்றத்தின் கண்ணியம் மேலும் கெடுமேயொழிய அது பாதுகாக்கப்பட மாட்டாது. இதைப் பற்றி பேச என்னிடம் நிறைய ஆதாரங்கள் மற்றும் வாதங்கள்இ ருக்கின்றன. ஆனால், நான் இந்த விடயத்தை பற்றி மேற்கொண்டு பேச விரும்பவில்லை.
ஆனால், இந்த நாட்டில் நீதிபதிகள் பற்றி பேசப்படுவது இது முதல் முறையல்ல. இந்த நீதிபதிகள் இதற்கு முன்பும் இந்த நாடாளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் ரொஷான் ரணசிங்க எம்.பி இந்த பாராளுமன்றத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியை விமர்சித்திருந்தார். மேலும், சரத் வீரசேகர எம்.பி முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக விமர்சித்திருந்தார். அந்த சமயங்களில் நீதி அமைச்சர் விஜேதாச இவர்களுக்கு எதிராக இப்படியெல்லாம் பேசவில்லை. ஆனால், நான் பேசியதற்கு மாத்திரம், நான் சொல்லாத வடயங்களையும் சேர்த்து இவ்வாறான கருத்துக்களை நீதி அமைச்சர் தெரிவித்தமைக்கு வருந்துகின்றேன்.
அத்துடன், “ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” வழக்கின் தீர்ப்பை தவறாக வழங்கியதாக முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது யார்? அந்த வழக்குத் தீர்ப்பு என்ன? யாருக்கு சாதகமாக அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்று முழு நாட்டுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
அத்துடன், 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த பின்னர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகைக்கு சென்ற போது, அங்கிருந்து பிரதம நீதியரசர் வெளியேறியதை நாம் அறிவோம்.
இதுபோன்ற செயற்பாடுகளால், நீதிபதிகளின் நடத்தை குறித்து எங்களுக்கு ஒரு பெரிய கேள்வி உள்ளது. சிறந்த நீதிபதிகள் இருக்கும் நாட்டில், ஒரு சிலரின் சில செயல்பாடுகளால், இந்த நாட்டின் நீதித்துறை பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த உரையை நிகழ்த்துவதற்கான காரணிகளை நான் தேடும் போது, நம் நாட்டில் வழக்கறிஞர்களுக்கு தொழில்சார் நெறிமுறை விதிகள் (Professional Ethics) இருந்தாலும், நம் நாட்டில் நீதிபதிகளுக்கு அத்தகைய நடைமுறைகள் இல்லை என்பதை நான் அறிந்துகொண்டேன்.
இலங்கையில் மட்டுமன்றி எல்லா நாடுகளிலும் இதுபோன்று நீதிபதிகள் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அமெரிக்காவில், நீதிபதிகளின் நடத்தை குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, உச்ச நீதிமன்றமே இந்த நவம்பரில் ஒழுக்கநெறி விதிமுறைகளை (code of conduct) வகுத்துள்ளது. அந்த ஒழுக்கநெறி விதிகளை இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். மேலும், ஐக்கிய இராச்சிய நீதிபதிகளின் ஒழுக்கநெறி விதிமுறைகளையும் (code of conduct) இந்த சபையில் நான் சமர்ப்பிக்கின்றேன்.
எமது நாட்டிலும் இதுபோன்றதொரு ஒழுக்கநெறி விதிமுறைகள் (code of conduct) இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். எனவே, இவ்விடயம் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச அவர்கள் ஆராய்ந்து, இவ்வாறானதொரு ஒழுக்கநெறி விதிமுறைகளை (code of conduct) எமது நீதித்துறையில் உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு-
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්