(UTV | கொழும்பு) –
நீதிமன்ற வழக்கு உதவிகளுக்கு தன்னிடம் உதவி பெற வந்த பெண்ணிடம் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்த உப பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச ஊழல் பிரிவினர் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை – கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள 58 வயது மதிக்கத்தக்க உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
நேற்று காலை கல்முனை பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வைத்து உப பொலிஸ் பரிசோதகரும் பெண் ஒருவரும் தங்கி இருந்த நிலையில் அங்கு சென்ற லஞ்ச ஊழல் பிரிவினர் குறித்த உப பரிசோதகரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்ற நடவடிக்கை ஒன்றிற்கு சமூகமளிக்கின்ற இறக்காமம் பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு சட்ட ஆலோசனை கூறுவதாக தெரிவித்து 8 நாட்களாக தொலைபேசி ஊடாக பாலியல் லஞ்சம் பெற முயற்சித்துள்ளார். இதனை அடுத்து குறித்த பெண் உரிய இடத்திற்கு முறைப்பாடு செய்த பின்னர் உப பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
களுவாஞ்சிக்குடி பகுதிக்கு செல்லவுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துவிட்டு உப பொலிஸ் பரிசோதகர் சம்பவம் இடம்பெற்ற கல்முனை பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதிக்கு வருகை தந்துள்ளார். அவ்வாறு வருகை தந்த அவர் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்த பின்னர் குறித்த பெண்ணை முச்சக்கரவண்டி ஒன்றின் உதவியுடன் அங்கு வருமாறு அழைத்துள்ளார். இவ்வாறு குறித்த பெண்ணை அழைத்து செல்வதற்கு தனக்கு நன்கு அறிமுகமான முச்சக்கரவண்டி சாரதியை பயன்படுத்தியுள்ளார். இதன்போது குறித்த பெண்ணை தொலைபேசி வாயிலாக அழைத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெண் லஞ்ச ஊழல் பிரிவினரின் ஆலோசனைப்படி விடுதி அறைக்கு சென்றுள்ளார்.
பின்னர் சுமார் 10 நிமிடத்தின் பின்னர் இலஞ்ச ஊழல் பிரிவு அதிகாரிகள் குறித்த விடுதி அறைக்குள் திடிரென உட்பிரவேசித்து அறைகுறை ஆடையுடன் காணப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யும் போது குறித்த அறையில் இருந்து பாலியலை தூண்டும் மாத்திரைகள் ஆண் உறை உள்ளிட்ட ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தையான அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் அப்துல் ஹை (வயது-58) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பின்னர் வாக்குமூலம் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொழும்பில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தவிர நீண்ட காலமாக நீதிமன்ற கடமையில் இருக்கின்ற இச்சந்தேக நபருக்கு காலை வேளை பாலியலை தூண்டும் மாத்திரைகள் ஆண் உறைகளை விநியோகித்தவர் யார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் போன்ற ஏனைய பெண்களிடமும் இவ்வாறு பாலியல் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதா? என இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්