(UTV | கொழும்பு) –
வரி அதிகரிப்புக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சீனியை விற்பனை செய்வதற்கு 275 ரூபா அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிப்பதற்காக இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பருவ காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டால், அதனை இறக்குமதி செய்யும் காலமும் நீடிக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டால் அதற்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிகளை அதிகரிக்க வேண்டியேற்பட்டது. அந்த அடிப்படையில் 25 சதமாகக் காணப்பட்ட சீனிக்கான இறக்குமதி வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். எனவே நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. வரி அதிகரிப்பதற்கு முன்னர் காணப்பட்ட சீனி தொகையை சில மாதங்களுக்கு 275 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும். எமக்கு வரி வருமானமும் அவசியம். நுகர்வோரின் பாதுகாப்பும் அவசியமாகும். 2024இல் உணவு பாதுகாப்பு தொடர்பில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக உணவு பணவீக்கத்தை குறைக்கவுள்ள அதே வேளை, அடுத்த வருடத்தில் உணவு பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
நாட்டில் சீனி இறக்குமதி செய்யும் 14 இறக்குமதியாளர்களில் 12 பேரிடம் பழைய சீனி தொகை களஞ்சியசாலைகளிலுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அந்த களஞ்சியசாலைகளில் நுகர்வோர் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்பனை செய்யக் கூடிய சீனியின் அளவு அவர்களால் நேரடியாக மதிப்பிடப்படும். எனவே பழைய சீனி தொகையை நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மாதாந்தம் 45 டொன் சீனி இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறிருக்கையில் 25 சதம் வரி அறவிடுவது பிரயோசனமற்ற விடயமாகும். அஸ்வெசும கொடுப்பனவு, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு மத்தியில் 25 சதம் வரி அறவீட்டினால் எவ்வித பயனையும் பெற்றுக் கொள்ள முடியாது. தற்போது நாம் மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்கின்றோம். டிசம்பர் 31ஆம் திகதி வரை இறக்குமதி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் முட்டை 35 ரூபாவுக்கும், உள்நாட்டு முட்டைகளை 43 – 47 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் அவற்றின் விலை 90 ரூபா வரை அதிகரித்திருக்கும்.
எனினும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுத்திருக்கின்றோம். அடுத்த மாதம் பருவ காலம் என்பதால் முட்டைக்கான கேள்வி அதிகமாகக் காணப்படும். எனவே உற்பத்திகளை அதிகரிக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து விலைகளை அதிகரிக்க முயற்சித்தால் முட்டை இறக்குமதிக்கான காலம் நீடிக்கப்படும். கோழி இறைச்சியின் விலை 1150 ரூபாவை விட அதிகரித்தால் நிச்சயம் கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயித்தல் தொடர்பிலும், இறக்குமதி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். வெ வ்வேறு விலைகளில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகின்ற போதிலும், சராசரி விலை தொடர்பிலேயே நான் இதனைக் குறிப்பிடுகின்றேன் என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්