(UTV | கொழும்பு) –
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
“2024 வரவு செலவுத் திட்டத்திற்கான இளைஞர் முன்மொழிவுகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் முதல்நாள் விவாதம் நடைபெற்றதோடு இரண்டாவது நாள் விவாதம் “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இலங்கை இளைஞர்களின் பங்கு” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.
முதல் நாள் அமர்வில் பிரதம அதிதிகளாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹன திசானாயக்க மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டதுடன், இரண்டாவது நாள், பிரதம அதிதிகளாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், விசட அதிதிகளாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மகேசன், சட்டக்கல்லூரி அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் பிரதீப் மாபலகம ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன, தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக மதிப்பளிக்கும் வகையில், பாராளுமன்ற சட்டமூலமொன்றின் ஊடாக இளைஞர் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்க ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கடந்த அமர்வில் அவர் வழங்கிய வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்தச் சட்டத்தின் மூலம் அடுத்த இளைஞர் பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசியல், பாராளுமன்ற மரபுகள், சர்வதேச உறவுகள் போன்ற பாடங்களை உள்ளடக்கிய விசேட டிப்ளோமா பாடநெறியொன்றை அறிமுகப்படுத்துவதற்காக தேசிய இளைஞர் அரசியல் விஞ்ஞான நிறுவனத்தை நிறுவுவதாக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தேசிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் உரிய முறையில் பயிற்சியளிக்கப்பட வேண்டுமெனவும், உத்தேச இளைஞர் பாராளுமன்ற சட்டம் மற்றும் அரசியல் விஞ்ஞான அகடமி மிகவும் காலத்திற்கேற்ற நடவடிக்கை எனவும் தெரிவித்தார். அதன் மூலம் எதிர்காலத்தில் அறிவாற்றலுள்ள மக்கள் பிரதிநிதிகள் குழுவை நாட்டுக்கு வழங்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இளைஞர்களை தொழில்முனைவோராக வலுவூட்டுவது காலத்தின் தேவை என சுட்டிக்காட்டிய அமைச்சர், இன்று இந்நாட்டு இளைஞர்கள் எதிர்நோக்கும் பலமான பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்தை இல்லாதொழிக்க இது உதவும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி மற்றும் அமைச்சரின் ஆலோசனையின் பேரில், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் இளைஞர்களின் கருத்துக்கள் ஆராயப்படும் எனவும் அடுத்த இளைஞர் பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் பழைய பாராளுமன்ற மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன மேலும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්